ஒரு உழைப்பாளியின் கதை



 வலிகள் பல எதிர்கொண்டு பாலைவனத்தை சோலைவனமாக்கி  பரவசப்படும் ஒரு வெற்றியாளனின்  அனுபவ உரையாடல் .
கடின உழைப்பு , சோர்வடையா மனம் அதனோடு உடனிருப்போரின் கை இணைந்த பயணம் . அதுவே இந்த வெற்றியாளரின் பரவச பகிர்வு.
எதிர் வரும் காலங்களில்  சாதனை பல புரிந்திட நாம் அனைவரும் வாழ்த்திடுவோம் .

நன்றி : FB 

செம்மை வனத்தின் கதை
ம.செந்தமிழன்
இது வெற்றிக் கதை அல்ல. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாத சிலரின் கதை. அந்த சிலரில் நானும் ஒருவன். மீதமுள்ளோரில் என் குடும்பத்தினர், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோர் அடக்கம். எங்களைக் காட்டிலும் இந்தக் கதையின் மையமான பாத்திரம் எங்கள் நிலம்.
அது அப்போது தரிசுக் காடு. ஆடு மாடுகள் மேய்ப்பதற்குக் கூட அவ்வளவு தகுதியில்லாத நிலம். மழைக் காலத்தில் செழிப்பாகப் புல் வளரும் காடு. கோடையிலோ ஒண்டுவதற்கு நிழல் கூட தர இயலாமல் கையறு நிலையில் காயும் காடு. சென்னையில் கிடைத்துக் கொண்டிருந்த சில இலட்சங்களையும் நவீன சொகுசுகளையும் விட்டு, ஊருக்கே செல்ல வேண்டும் என நாங்கள் புறப்பட்டபோது, எங்கள் நிலம் எங்களை வரவேற்கக் கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு மூங்கில் புதர் மட்டுமே நிழலுக்கான ஆதாரம். அங்கேயும் நிறைய முள் கொட்டிக் கிடக்கும் என்பதால், வெயிலில் அமர்வதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. நிலத்தின் மற்ற பகுதி, அடர்ந்த புதர்க் காடு. முட் புதர்கள் நிறைந்த காடு அது. கால் வைப்பதே கடினம். இரவில் நரிகள் அங்கிருந்து ஊளையிடுவதுண்டு.
அக்காட்டிலிருந்த சில நூறு வேப்ப மரங்கள் ஆண்டு தோறும் வெட்டப்பட்டிருந்தன. தண்டு பெருத்திருக்கக் கூடிய மரங்கள் அடியோடு வெட்டப்பட்டு, அடியிலிருந்து முளைத்து குச்சி குச்சியாக நின்றன. வெட்டியவர்கள் மிகுந்த பொறுப்புடன், வேர்களை விட்டு வைத்திருந்தனர். அப்போதுதானே, மரம் துளிர்க்கும் மீண்டும் வெட்டி விற்கலாம் என்பது கணக்கு. தெரிந்தவர்களும் வெட்டினார்கள் தெரியாதவர்களும் வெட்டினார்கள். ஆக, இருந்த மரங்களும் குச்சிகளாக நின்றன.
தென் மேற்கு மூலையில் ஒரு கிணறு உண்டு. நல்ல ஊற்று தருவது அது. அதற்கென மின் இணைப்பும் இருந்தது. அதில் இருந்த மோட்டாரை இயக்கினால், சில நிமிடங்களில் அது ஆடி ஆடி நகர்ந்து கொண்டே இருக்கும். பின்னர் பெருத்த ஓசையுடன் நின்று விடும் அல்லது நீர் இறைக்கும் அளவைக் குறைத்துவிடும்.
இருந்த பணிகளை எல்லாம் உதறி விட்டு நாங்கள் எங்கள் நிலத்தை நம்பிச் சென்றபோது, எங்கள் நிலம் எங்களுக்கு உதவ இயலாத நிலையில் இருந்தது. ஏற்கெனவே குத்தகைக்கு அந்நிலத்தில் வேளாண்மை செய்தவர்கள் கணக்கில்லாமல் இரசாயன உரங்களைக் கொட்டி உயிர்ச் சத்துகளைக் கொலை செய்திருந்தனர். ஒருகாலத்தில் வண்டி வண்டியாக விளைந்த நிலம் வண்டித் தடமாக மாறிப் போயிருந்தது. மண்ணை எடுத்து முகர்ந்து பார்த்தால், மண்ணுக்கான மணமே இல்லை.
தென் கிழக்கு மூலையில் உள்ள ஒரு பகுதி நிலம் மிக வினோதமானது. அப் பகுதியில் புல் கூட முளைத்திருக்கவில்லை. இது என்னை மிகவும் வியக்க வைத்தது. புல் கூட முளைக்கவியலாத நிலைக்கு ஒரு நிலம் தள்ளப்படுவது மனிதச் செயல்பாடுகளின் உச்சகட்ட அநீதியின் விளைவு. ஏனோ என்னை அந்தப் பகுதிதான் அதிகம் ஈர்த்தது.
முதல் பணியை இங்கே துவங்க வேண்டும் என ஏன் முடிவெடுத்தேன் என தர்க்கப் பூர்வமாக விளக்க முடியவில்லை. ஆனால், முதன் முதலில் மாங்கன்றுகளை நாங்கள் நட்டது அப் பகுதியில்தான். பொசுக்கும் வெயிலில் வாய்க்கால் வெட்டி, குறைந்த விலை குழாய்களை வாங்கி கிணற்று நீரை அப் பகுதிக்குக் கொண்டு சென்றோம். எனது காரிலேயே சாணி மூட்டைகளையும் ஆட்டு எரு மூட்டைகளையும் எடுத்துச் சென்று கொட்டி கன்றுகள் நட்டோம். அம்மா, மனைவி, உதவியாளர், உள்ளூர் பணியாளர்கள் அடங்கிய எங்கள் குழு முற்றிலும் கடினமான பணியில் ஈடுபடத் தொடங்கியது.
அப்போது வெயிலில் பணி செய்து உடல் சூடு அதிகமானால் ஒதுங்க இடம் தேடி ஓடிய சம்பவங்கள் சற்றே பரிதாபமிக்கவைதான். என் அம்மா மூங்கில் புதரைச் சுத்தம் செய்து அமர்வதற்கு ஏதுவாக இடம் உருவாக்கினார். அது நடுக்காடு. ஆகவே, தேநீருக்குக் கூட வழியில்லை. கற்களால் அடுப்பு அமைத்து மூங்கில் புதர் நிழலில் தேநீர் தயாரிப்பது என் அம்மாவின் கடமையாக மாறியது.
நிலம் வருவாய் தரும் என நம்பி நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்டோம். நிலமோ எங்களிடமிருந்த சகல சேமிப்புகளையும் நம்பிக் காத்திருந்தது. என் மனைவியின் ஆலோசனைப்படி செலவுகளை எழுதி வைக்கத் துவங்கினேன். சில நாட்களில் அந்தக் கணக்குகளைப் பார்த்து அவரே, ‘இனி எழுதாமலே செலவு செய்யலாம். எழுதின பிறகு பார்க்க கஷ்டமா இருக்கு’ என்றார்.
ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்தோம். காய்கறிகள் விதைத்தோம். நீர்மூழ்கி மோட்டார் வாங்கினோம். தரமான குழாய் இணைப்புகள் அமைத்தோம். மூங்கில் வேலிகள் அமைத்தோம். மாத ஊதியத்தில் பணியாளர் அமர்த்தினோம். நிலம் எனது கனவில் புன்னகைக்கத் துவங்கியது. வங்கி இருப்போ நனவில் கண் கலங்கியது. நானும் என் மனைவியும் புன்னகைப்பதா கலங்குவதா எனப் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். நிலத்திற்குத் திரும்புவதைப் பற்றிய எனது அதிரடி முடிவு சறுக்கிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கவலையடைந்தனர் என் பெற்றோர்.
நிலத்தில் எந்த இடத்தில் விதைத்தாலும் முளைக்கக் கூட உயிர்ச் சத்து இல்லாமல் நிலம் பாடுபட்டது.
முதல் முறையாக ஓரிடத்தில் மண் புழுக்களைக் கண்டபோது, என் நண்பர்களுக்கு அலைபேசியில் அழைத்துப் பேசினேன். என் அப்பாவை நேரில் சந்தித்து அந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டேன். என் மனைவியை அழைத்து வந்து அவ்விடத்தைத் தோண்டி மண் புழுக்களைக் காட்டினேன். எங்கள் மகன் முதல் முறையாக மண் புழு பார்த்தான். நிலம் என்னை வாரியணைக்கக் கை நீட்டியது. ஆனால், அதன் கைகளில் போதுமான வலு இல்லாமல் தடுமாற்றத்துடன் கையைத் தளரவிட்டது.
ஊரில் மக்கள் என்னை ஒரு முட்டாளாகவும் பணக்காரத் திமிர் கொண்டவனாகவும் பார்த்தார்கள். என் மீது அன்பு கொண்டோர் என்னைப் பிழைக்கத் தெரியாதவனாக நினைத்து வருந்தினார்கள்.
இயற்கை வேளாண்மைதான் செய்ய வேண்டும் என்ற கொள்கையால் இழந்தவை அதிகம்தான். ஆனால், பெற்றவை எண்ணற்றவை. நிச்சயமாக அவற்றைப் பணத்தால் அளக்க முடியாது. சில ஆண்டுகளில் எங்கள் நிலத்தில் சாதகமான மாற்றங்கள் தெரியத் துவங்கின. பொருளாதாரமாகப் பேசுவதானால், நிலத்தில் கொட்டிய பணம் சரியாகக் காய்க்கவில்லைதான். ஆனால், எங்கள் நிலம்தான் எனக்கு வாழ்க்கையைக் கற்றுத் தந்தது, இயற்கையைப் பற்றிய பாடங்களை எடுத்தது, இயற்கையின் பேராற்றலை எனக்கு அறிமுகம் செய்தது, வெற்றி – தோல்வி ஆகிய இரண்டும் அர்த்தமற்ற சொற்கள் எனப் புரிய வைத்தது.
முதல் மாம் பூ பூத்தபோது, முதல் தென்னை பாளை விட்டபோது, முதல் மீன் துள்ளியபோது, முதல் கோழி முட்டையிட்டபோது, முதல் ஆடு குட்டி ஈன்றபோதெல்லாம் எங்கள் நிலம் என்னை வாரி அணைத்துக் கொண்டது. அதன் கரங்கள் வலுவடைந்திருந்தன.
இப்போது, மரக் கூட்டங்களிடையே எங்கள் நிலம் செழித்துள்ளது. கூடுதலாக, ஏறத்தாழ ஆயிரம் மரக் கன்றுகளையும் இப்போது நட்டுள்ளோம். வேறு பல பணிகளும் செய்கிறோம்.
வாகை மரங்கள் பெருத்து உயர்ந்து வளர்ந்துள்ளன. கொன்றை, அழிஞ்சில், நுணா, மம்மாரை, வேம்பு, வெள்ளை வேல், முள் முருங்கை, ஒதியன் உள்ளிட்ட பல மரங்கள் உள்ளன. மா, பலா, தேக்கு, முருங்கை, குமிழ், வேங்கை, ஈட்டி உள்ளிட்ட மரங்கள் தோப்பாகியுள்ளன.
நிலம் இப்போதும் பெரிய சோலையாக மாறிவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இப்போது நிலம் உயிர்ப்புடன் இருக்கிறது. அதனால், நான் எங்கு சென்றாலும் என்னை அது அழைக்கிறது. அதன் அழைப்பை என்னால் எப்போதும் உணர முடிகிறது. இப்போது அதன் பெயர் செம்மை வனம்.

Comments

  1. Nice article.. is it true story.? if so give bit mroe info

    ReplyDelete

Post a Comment

Popular Posts