தக்காளி

தங்கமென தழைக்கச் செய்யும் தக்காளி

by PesPro
தக்காளிக்கு பழங்களின் 'கவர்ச்சிக்கன்னி' என்ற செல்லப்பெயர் உண்டு. தக்காளியின் தாயகம் இன்றைய மெக்சிகோ மற்றும் பெரு தேசமாக இருக்கும் என கருதப்படுகிறது. அசிட்டெக் என்னும் தென்னமெரிக்க சமூகத்தினர் கி.பி. 500-களில் பயிரிட்டு பயன்படுத்தி இருக்கின்றனர் என அனுமானிக்கிறார்கள். அசிட்டெக் மக்களின் பேரரசன் 'மாண்டெசுமா' என்பவன் கி.பி. 700 களில், டெக்ஸ்கொகோவில் (இன்றைய மெக்சிகோ சிட்டி) நிர்மாணித்த மிதக்கும் தோட்டத்தில் தக்காளியை பயிரிட்டிருந்தான். தக்காளியின் ஆங்கிலப்பெயரான 'டொமொட்டோ' என்னும் சொல் அசிட்டெக் வட்டார மொழியான நாப்தக்கில் வழங்கப்பட்ட 'டொமேட்டி' என்பதில் இருந்து பெறப்பட்டதுதான்.
1492-ம் ஆண்டு மெக்சிகோவில் இருந்து கொலம்பியாவுக்கு அறிமுகமானது. ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் கோர்டெஸ், மெக்சிகோ பகுதிகளை கி.பி. 1519-ல் ஆக்கிரமித்தபோது மாண்டெசுமா தோட்டத்தில் இருந்து தக்காளி விதைகளை எடுத்து வந்தான். அதன்மூலம் ஸ்பெயின் மற்றும் இதர தென்னமெரிக்க நாடுகளுக்கு தக்காளி பயிர் பரவ காரணமாக இருந்தான். அப்படி முதன்முறையாக தக்காளி பரவியபோது ஒரு அலங்காரப் பொருளாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அரண்மனைகளில், பூங்காக்களில், சபைகளில் அழகுப்படுத்த மட்டும் உபயோகப்படுத்தப்பட்டது. தொடக்கக் கால தக்காளிகள் மஞ்சள் நிறம் உடையவை. இந்த வகை தக்காளிகளுக்கு 'பொமிடோரா' என்று பெயர். இதற்கு 'மஞ்சள் ஆப்பிள்' என்று பொருள். இன்றைக்கும் ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பரவலான தக்காளி வகை மஞ்சள் தக்காளிதான்.
தக்காளியை அழகு சாதனப் பொருளாக மட்டும் பயன்படுத்திய நாடுகள் அநேகம். தக்காளியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு திரவத்தை, பெண்கள் தங்கள் கண்களின் கீழே தடவி கரு வளையங்களை மறைத்திருக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிதான் முதன்முதலாக தக்காளிப் பழத்தை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது. தக்காளியைக் கொண்டு சாஸ், ஜாம் என்று, பலவகை உணவு பதார்த்தங்களை செய்து ருசித்ததும் இத்தாலிதான். 1544-ம் ஆண்டு ஆண்ட்ரியா மத்தியோலா என்கிற இத்தாலியப் பெண்மணி தக்காளியை கொண்டு செய்யும், பல்வேறு உணவு குறிப்புகள் அடங்கிய கையேடு ஒன்றை வெளியிட்டார்.
தக்காளியும் வதந்திகளும்
தென்னமெரிக்க நாடுகளைத்தவிர பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், தக்காளி ஒரு விஷச்செடி என்றே கருதி உண்ணாமல் வேடிக்கைப் பார்த்து வந்தனர். ஜெர்மனியில் அக்காலத்தில் சொல்லப்பட்ட நாட்டுப்புற கதை ஒன்றில், ஓநாய்கள் விரும்பி தின்னும் 'வுல்ப் பீச்' என்னும் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால், தக்காளியை தின்றால் ஓநாய்ப் போல மாறி விஷம் ஏறி மரணமடைய நேரும் என்கிற மூடநம்பிக்கை இருந்தது. இதனால் தக்காளி, பலநூறு ஆண்டுகளாக துக்கத்தில் கனிந்து, கசிந்து, தானாக நசிந்து போனது.
1692-ல் ஜோசப்பிட்டன் என்னும் ஜெர்மானியர் தனது புத்தகம் ஒன்றில், தக்காளி 'லைக்கோபீக்கன்' என்னும் வகையைச் சார்ந்த ஒரு விஷச்செடி என்கிற பொருளில் ஒரு கட்டுரை எழுதிவிட்டார். ஆனால் அவரது கூற்றில் சிறிதும் உண்மையில்லை என்று அவருக்குப் பிறகு தக்காளி பற்றி ஆய்வு செய்த கார்ல் லினாகஸ் என்பவர் தெளிவுபடுத்தினார். தக்காளி 'சொலானம்' என்னும் வகையைச் சேர்ந்தது. எனவே அது விஷச் செடி அல்ல என்று நிரூபித்தார்.
அமெரிக்க மக்கள் 1830 வரை 'தக்காளி உண்ணத்தகுதியானது அல்ல' என்றே கருதி வந்தார்கள். இதற்கு ராபர்ட் கிப்பன் ஜான்சன் என்பவர் 1830 செப்டம்பர் 26-ந் தேதி முற்றுப்புள்ளி வைத்தார். அன்றைய தினம் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள சேலம் என்னும் நகரத்தின் நீதி சபை வாசலில் நின்று கொண்டு, பொதுமக்கள் எதிரே தக்காளி விஷமில்லை என்பதை நிரூபிப்பதற்காக ஒரு கூடை தக்காளியை தின்னப்போவதாக அறிவித்தார். அவரது மருத்துவர் ஒருவர் ‘இது அப்பட்டமான தற்கொலை முயற்சி. ஜான்சன் நுரைதள்ளி சாகப்போகிறார்' என்று பதறினார். ஆனால் ஜான்சனுக்கு எதுவுமே ஆகவில்லை என்பதை ஊர்மக்கள் சற்று ஆச்சரியத்துடனேயே ஏற்றுக்கொண்டனர். அந்த சம்பவத்துக்குப் பிறகு தக்காளி பயிரிடுதலும், பயன்படுத்தலும் அமெரிக்காவில் அதிகமானது.

தக்காளியின் வகைகள்
உலகம் முழுக்க சுமார் 7,500 வகை தக்காளிகள் உள்ளன. ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் மஞ்சள் நிற தக்காளிகள் 'எல்லோ ஆப்பிள்' எனவும், பொன்நிற தக்காளிகள் 'கோல்டன் ஆப்பிள்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. பிரான்சில் காணப்படும் தக்காளிகள், இதய வடிவில் இருக்கும். அவற்றுக்கு 'லவ் ஆப்பிள்' என்றும் பெயர்.
மணத்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை. அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் 'சீமைத்தக்காளி' எனக் கூறுவர். புளிப்புச் சுவையற்ற, பழச்சாறு செய்வதற்கு ஏற்ற, விதைகள் அல்லாத வகை தக்காளியை 'பெங்களூரு தக்காளி' என்பார்கள்.
தக்காளி தற்பொழுது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் மட்டுமின்றி வெள்ளை, கருநீலம், பச்சை, ஆரஞ்சு, கருப்பு மற்றும் அரக்கு வண்ணங்களில் கூட விளைவிக்கப்படுகிறது. 16-ம் நூற்றாண்டில்தான் இந்தியாவுக்கு முதன்முதலாக தக்காளி அறிமுகமானது.

தக்காளியின் மருத்துவ குணங்கள்
தக்காளியில் உள்ள சிட்ரிக், பாஸ்போரிக், மாலிக் ஆகிய அமிலங்கள் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன. எனவே தக்காளியை அன்றாட உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தக்காளி உடலில் உள்ள விஷக்கிருமிகளை அப்புறப்படுத்தி, சிறுநீரை நன்கு வெளியேறச் செய்கிறது. தக்காளியில் வைட்டமின்-  கி  , வைட்டமின்-  சி  , பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவு உள்ளன.
தக்காளியின் ஒரு வகையான மணத்தக்காளி, குடல் புண் மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்தும் வல்லமையுடையது.

சண்டையால் உருவான திருவிழா
ஸ்பெயின் நாட்டில் வேலன்சியா மாகாணத்தில் உள்ள ப்யூனல் என்னும் நகரத்தில் 'லா டொமோட்டினா' என்னும் பெயரில் தக்காளித் திருவிழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமை இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழா ஆரம்பித்ததே ஒரு தற்செயலான சண்டை மூலமாகத்தான். 1945-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமை அன்று ப்யூனல் கடைத்தெருவில் ஒரு இளைஞர் குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் அருகிலிருந்த கடைகளிலிருந்து தக்காளிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர். உண்மையில் பெரும் கலவரமாக வெடித்திருக்க வேண்டிய அந்த சம்பவம் தக்காளி வீச்சினால் வேடிக்கையான சம்பவமாக மாறிவிட்டது. காவல்துறையினர் வந்த போது இரண்டுதரப்பினரும் சந்தோஷத்துடன் சமரசமாகி தக்காளிக்கான தொகையை பகிர்ந்து வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டனர். அவர்களுக்கு இடையேயான பகை மறந்துவிட்டது. ஆனால் அந்த உற்சாக விளையாட்டு மறக்கவே இல்லை. ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமை தக்காளிகளை விலைகொடுத்து வாங்கி அதே போல் வீசிக்கொண்டனர். 1950-ம் வருடம் ப்யூனல் நகராட்சி ஊர் மாசுபடுவதாகக் கூறி இதனை தடை செய்தது. ஆனால் பலத்த எதிர்ப்புகளின் காரணமாக 1957-ல் அனுமதியளித்து விட்டது.
விஷச்செடியாக, மூலிகையாக, பழமாக, காயாக, ஆயுதமாக, உணவாக பலவிதங்களில் அறியப்பட்டாலும், மேலை நாடுகள் பலவற்றிலும் பெண்கள் அழகு நிலையங்களில் தக்காளி பிரதான அழகுச் சாதனப்பொருளாக இருக்கிறது. இதற்கு தக்காளி, முகத்தை தகதகவென தங்கம் போல மின்னவைக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம். முகத்தை மட்டுமல்ல உடல் முழுமையையும் தங்கம் போல் தக்க வைக்கும் தக்காளி.
தக்காளிக்காக நடந்த வழக்கு
1883-ல் அமெரிக்க அரசாங்கம், 'டாரிப் ஆக்ட்' என்னும் சட்டத்தின் மூலம் புதிய வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியது. அதன்படி பழங்களை இறக்குமதி செய்ய வரிகள் இல்லை. ஆனால் (வருவாயை கருத்தில் கொண்டு) காய்களுக்கு வரிகள் உண்டு என்பது அந்த சட்டத்தின் விதி. அந்த விதியை அடிப்படையாகக் கொண்டு, தக்காளி மீது வரி விதிக்கப்பட்டது. தாவரவியல் கொள்கைப்படி தக்காளியும் பழம்தானே.
அதனால் தக்காளி மீதான வரியை நீக்கக்கோரி ஜான் நிக்ஸ் என்பவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் நீதிபதி கிரே, 'தக்காளியை ஒரு பழம் என்னும் நோக்கில், அதனை தனியாக யாரும் சாப்பிடுவது இல்லை. அது சமையல் உணவாகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே தக்காளியை, காய் எனக் கருதி வரி விதிப்பதில் எந்த தவறும் இல்லை' என தீர்ப்பளித்துவிட்டார்.
தக்காளி இல்லாமல் இத்தாலி இல்லை..
பீட்சாவின் தாயகம் இத்தாலி என்பது அனைவரும் அறிந்ததே. பீட்சா உருவான வரலாறு மிக சுவாரசியமானது. இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு 1880-ல், மகாராணி மார்க்ரேட் வருகை புரிந்தார். அப்போது மக்கள் மனநிறைவோடு அவருக்கு விதவிதமான பரிசுகள் தர முயன்றனர். நேப்பிள்ஸ்-ன் பிரபலமான உணவக சமையல்காரர் ஒருவர், வித்தியாசமான பரிசினைத் தர நினைத்தார். பதப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான ரொட்டியின் மீது இத்தாலியின் தேசியக்கொடியின் மூவர்ணங்களான சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகியவற்றை பிரதிபலிக்கும் காய், கனி வகைகளைக்கொண்டு சமைத்து அவருக்கு பரிமாற வேண்டும் என தீர்மானித்தார்.
அதன்படி சிவப்புக்காக தக்காளித் துண்டுகளையும், வெள்ளை நிறத்துக்காக வெண்ணெயையும், பச்சை நிறத்துக்காக துளசி இலையையும் கொண்டு ஒரு புதிய பதார்த்தத்தை படைத்தார். அதுதான் பீட்சாவாக பிரபலமானது. காலப்போக்கில் பீட்சா பல காய், கனிகள் மற்றும் விதவிதமான சுவைகளில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதன் மாறாத ஜோடி தக்காளிதான். பீட்சா, தக்காளி சாஸ், தக்காளி ஜாம், தக்காளி ஜூஸ் என தக்களியோடுதான் இத்தாலியின் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. இத்தாலி நாட்டினர் எங்கு குடியேறினாலும் அங்கு தக்காளி கிடைக்குமா? என்றுதான் கவலைப்படுவார்கள். ஏனெனில் தக்காளி இல்லாமல் இத்தாலி இல்லை.
DT

Comments

Popular Posts