பாரம்பரிய ரகங்கள்



பாரம்பரிய ரகங்கள் !.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் போல நெற்பயிர் விரிந்து கிடக்க… வரப்பில் அமர்ந்தபடி அருள்மொழியுடன் பேசினோம்.
”எங்களுது பரம்பரை விவசாயக் குடும்பம். அப்பா வாத்தியார் வேலை பார்த்துக்கிட்டே, விவசாயமும் பார்த்தார். வீட்டுல மூணு பொண்ணுங்க, நான் ஒரே ஒரு பையன். பன்னெண்டாவது வரைக்கும் படிச்சேன். அதுக்குமேல படிப்பு ஏறல. அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க வந்துட்டேன். தொடக்கத்துல நல்ல விளைச்சல் இருந்தாலும், ரசாயன உரம் கொடுக்குறப்போ விளைச்சல் குறைஞ்சுக்கிட்டே இருந்துச்சு. அதுக்கேத்த அளவுக்கு உரம், பூச்சிக்கொல்லி இதையெல்லாம் கூட்டுறப்போ, செலவு அதிகரிக்க ஆரம்பிச்சுது.
இந்தச் சூழ்நிலையில, இங்க நடந்த ‘கபிலர் விழா’வுல கலந்துக்கிட்டேன். அங்க வந்திருந்த நம்மாழ்வார், ‘ரசாயன உரங்களைக் கொட்டி நிலம் கெட்டுப்போச்சு. அதுல விளையுற உணவும் விஷமாத்தான் இருக்கு’னு விரிவா பேசினார். அதைக் கேட்ட பிறகு, இயற்கை பத்தின தேடல்ல இறங்கினேன். தமிழ்நாடு முழுக்க நிறைய இயற்கை விவசாயப் பண்ணைகளுக்குப் போய், அவங்களோட விவசாயத் தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுட்டு, நானும் இயற்கை விவசாயத்துல இறங்கினேன். அதோட, ‘பசுமை விகடன்’ புத்தகம் சொல்லிக் கொடுத்த ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி எல்லாத்தையும் பயன்படுத்த ஆரம்பிச்சேன்” என்று முன்னுரை கொடுத்த அருள்மொழி, தொடர்ந்தார்.
போன வருஷம் படிச்சேன்… இந்த வருஷம் விதைச்சேன்!
”எனக்கு மொத்தம் 30 ஏக்கர் நிலமிருக்கு. ஆட்கள் பிரச்னையால 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டேன். மீதி 15 ஏக்கர்ல மட்டும்தான் விவசாயம். நாலு கிணறு இருக்கறதால தண்ணி பிரச்னை இல்லை. ஆரம்பத்துல ஆடுதுறை நெல் ரகங்களைத்தான் சாகுபடி பண்ணினேன். ‘பசுமை விகடன்’ல படிச்சுத் தெரிஞ்சுகிட்ட பிறகு, அஞ்சு வருஷமா சீரகச்சம்பா, வெள்ளைப்பொன்னி நெல் ரகத்துக்கு மாறிட்டேன். இதுல நல்ல மகசூல் கிடைக்குது. நல்ல விலையும் கிடைக்குது.
போன வருஷம்… ‘பொங்கல் சிறப்பிதழ்’ல ஐந்து ரகங்கள் சாகுபடி செய்ற சுப்ரமணியசிவா பத்தி வந்திருந்துச்சு. அவர்கிட்ட இருந்து சேலம் சன்னா, ஆத்தூர் கிச்சடி, மாப்பிள்ளைச்சம்பா விதைகளை வாங்கி, விதைச்சேன். அதோட சீரகச்சம்பா, வெள்ளைப்பொன்னியையும் சேத்ததுல இந்த வருஷம் நானும் 5 நெல் ரகங்களை சாகுபடி செஞ்சுருக்கேன். பன்னிரண்டரை ஏக்கர்ல வெள்ளைப்பொன்னி, 50 சென்ட்ல ஆத்தூர் கிச்சடி, 50 சென்ட்ல சேலம் சன்னா, 90 சென்ட்ல சீரகச்சம்பா, 60 சென்ட்ல மாப்பிள்ளைச்சம்பானு நெல்லு பயிர் நிக்குது. சில ரகங்கள் விளைஞ்சு அறுவடைக்குத் தயாரா இருக்கு. சில ரகங்கள் அறுவடைக்கு வர ஒரு மாத காலமாகும்” என்ற அருள்மொழி, தான் சாகுபடி செய்யும் முறைகளை விவரித்தார். அதை அப்படியே தொகுத்திருக்கிறோம்.
ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு குணம்!
‘வெள்ளைப்பொன்னி நெல் ரகத்தின் வயது 145 நாட்கள். ஆத்தூர் கிச்சடி, சேலம் சன்னா மற்றும் சீரகச்சம்பா ஆகியவற்றின் வயது 135 நாட்கள். மாப்பிள்ளைச்சம்பா… 160 நாட்கள். ஆத்தூர் கிச்சடி ரகம் சன்னமாக வும், சுவையாகவும் இருக்கும். இது சாதத்துக்கு ஏற்றது. சேலம் சன்னாவில், நெல் சிகப்பாக இருந்தாலும், அரிசி வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். சர்க்கரைப்பொங்கல் செய்வதற்கு ஏற்ற ரகமிது. சீரகச்சம்பா வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். பிரியாணி போன்ற உணவு வகைகள் சமைப்பதற்கு ஏற்றது. மாப்பிள்ளைச்சம்பா, உடலுக்கு வலிமை கொடுப்பதோடு, சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைக்கும் குணம் கொண்டது.
ஏக்கருக்கு 15 கிலோ விதை!
நாற்றங்கால் அமைக்க, ஏக்கருக்கு 10 சென்ட் என்ற கணக்கில் நிலத்தை ஒதுக்க வேண்டும். 10 சென்ட் நிலத்தில் ஒரு மாட்டு வண்டி தொழுவுரத்தைக் கொட்டிக் களைத்து, தண்ணீர் கட்டி, மூன்று சால் உழவு செய்து சமப்படுத்திக் கொள்ள வேண்டும். 20 கிலோ மண்புழு உரத்துடன், தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ-பாக்டீரியா, 100 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து, நாற்றங்காலில் தூவ வேண்டும். ஏக்கருக்கு 15 கிலோ விதைநெல் தேவைப்படும். விதையை தண்ணீரில் 36 மணி நேரம் ஊற வைத்து, மூன்றாம் கொம்பு விதையாக… காலை நேரத்தில் நாற்றங்காலில் தண்ணீர் நிறுத்தி பாவ வேண்டும். மாலையில் தண்ணீரை வடித்து, ஐந்து நாட்களுக்கு காய விட்டால் முளைப்பு எடுத்துவிடும். பிறகு, உயிர் தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும்.
7-ம் நாளில் 25 லிட்டர் அமுதக்கரைசலைத் தண்ணீரில் கலந்துவிட வேண்டும்.
12-ம் நாளில் 5 கிலோ கடலைப்பிண்ணாக்கை தண்ணீரில் ஊற வைத்து, 20 கிலோ தொழுவுரத்தோடு கலந்து தூவ வேண்டும். பூச்சித்தாக்குதல் இருந்தால், 12 லிட்டர் தண்ணீருக்கு, 500 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கலாம் (ஏக்கருக்கு 10 டேங்க் பிடிக்கும்). 18-ம் நாளில் நாற்று தயாராகிவிடும். 22-ம் நாளுக்குள் பறித்து நடவு செய்துவிட வேண்டும்.
வளர்ச்சியைக் கூட்டும் உயிர் உரங்கள்!
நாற்று தயாராகும்போதே நடவு நிலத்தையும் தயார் செய்ய வேண்டும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில், பலதானிய விதைப்பு செய்து, பூ எடுத்ததும் மடக்கி உழவு செய்து, ஆட்டுக்கிடை கட்ட வேண்டும். பிறகு, சேற்று உழவு செய்து நிலத்தை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். செறிவூட்டப்பட்ட 500 கிலோ மண்புழு உரக்கலவையைத் தூவ வேண்டும் (500 கிலோ மண்புழு உரம், தலா இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ-பாக்டீரியா, ஒரு கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து
7 நாட்கள் வைத்திருந்தால், செறிவூட்டப்பட்ட மண்புழு உரம் தயார்). தொடர்ந்து, வழக்கமான முறையில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் கட்டினால் போதும்.
20-ம் நாளில் களை எடுத்து… செறிவூட்டப்பட்ட 20 கிலோ மண்புழு உரக்கலவையைத் தூவ வேண்டும் (20 கிலோ மண்புழு உரம், தலா இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ-பாக்டீரியா, ஒரு கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து
7 நாட்கள் வைக்க வேண்டும்). 25-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பஞ்சகவ்யா, மீன் அமிலம், பூச்சிவிரட்டி என மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும் (டேங்க்கின் அளவு 12 லிட்டர். பஞ்சகவ்யா எனில் ஒரு டேங்க்குக்கு 300 மில்லி. மீன் அமிலம் எனில், ஒரு டேங்க்குக்கு 150 மில்லி. பூச்சிவிரட்டி எனில், ஒரு டேங்க்குக்கு 750 மில்லி. ஏக்கருக்கு
10 டேங்குகள் தேவைப்படும்). அறுவடை வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர வேண்டும். இதையும் மீறி பூச்சித்தாக்குதல் இருந்தால், இஞ்சி-பூண்டுக் கரைசல் தெளிக்கலாம். பெரும்பாலும், பாரம்பரிய ரகங்களில் பூச்சிகள் வருவதில்லை.
வெள்ளைப்பொன்னி, 100-ம் நாளுக்கு மேல் கதிர் பிடித்து, 125-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கி 145-ம் நாளுக்கு மேல் அறுவடைக்கு வந்துவிடும். ஆத்தூர் கிச்சடி, சேலம் சன்னா மற்றும் சீரகச்சம்பா ஆகிய ரகங்கள், 90-ம் நாளுக்கு மேல் கதிர் பிடித்து 115-ம் நாளுக்கு மேல் முற்றத் துவங்கி, 135-ம் நாளுக்கு மேல் அறுவடைக்கு வந்து விடும். மாப்பிள்ளைச்சம்பா, 110-ம் நாளுக்கு மேல் கதிர் பிடித்து, 140-ம் நாளுக்கு மேல் முற்றத் துவங்கி, 160-ம் நாளுக்கு மேல் அறுடைக்கு வந்துவிடும்.’
சாகுபடிப்பாடம் முடித்த அருள்மொழி, நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
”பன்னிரண்டரை ஏக்கர் நிலத்தில் 312 மூட்டை (75 கிலோ) வெள்ளைப்பொன்னி ரக நெல் கிடைக்கும். இதை அவிச்சு அரிசியாக்கினா, 14 ஆயிரம் கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 45 ரூபாய் வீதம் விற்பனை செஞ்சா, 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
90 சென்ட் நிலத்துல 20 மூட்டை சீரகச்சம்பா நெல் கிடைக்கும். இதை பச்சரிசியா அரைச்சா 900 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு விற்பனை செஞ்சா 63 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அரை அரை ஏக்கர்ல தனித்தனியா இருக்குற ஆத்தூர் கிச்சடி, சேலம் சன்னா ரகங்கள்ல தலா 12 மூட்டைகள் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். மொத்தம் 24 மூட்டைகள் கிடைக்கும். இதை அவிச்சு அரிசியாக்கினா, 1,080 கிலோ அரிசி கிடைக்கும். இதை கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 60 சென்ட் நிலத்தில் இருக்குற மாப்பிள்ளைச்சம்பாவுல 10 மூட்டை நெல் கிடைக்கும்னு எதிர் பாக்குறேன். இதை அவிச்சு அரிசியாக்கினா, 450 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 60 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 27 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
ஆக மொத்தம், 15 ஏக்கர்ல இருந்து 7 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவுனு வெச்சுக்கிட்டா, 15 ஏக்கர் நிலத்துக்கும் சேர்த்து 3 லட்சம் ரூபாய் மொத்த செலவு. அதைக் கழிச்சா… 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். ஒரு ஏக்கருக்குனு கணக்கு பாத்தா ஒரு போகத்துக்கு 31 ஆயிரம் ரூபாய் லாபம்.
மதிப்புக்கூட்டி அரிசியா விற்பனை பண்றதாலதான் இந்த லாபம். இதையே நான் நேரடியா நெல்லா வித்தா லாபம் குறையும். அதேபோல ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினா… இன்னும் லாபம் குறையும்” என்று சொல்லி விடைகொடுத்தார், அருள்மொழி.
நன்றி பசுமை விகடன்
  • Kukil Farms பாரம்பரிய நெல் ரகங்களுக்கு திரு,ஜெயராமன், செல்போன்: 94433-20954.
  • Kukil Farms திரு,அருள்மொழி, செல்போன்: 94873-81043.

Comments

Popular Posts