மறந்து போன ஆடு புலி ஆட்டம்



மறந்து போன ஆடு புலி ஆட்டம்
##############################
ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.
ஆடு புலி ஆட்டக்கோடு
விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்த பகுதியில் முக்கோணக் கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டில் மொத்தம் 18 ஆட்டக்காய்கள் இருக்கவேண்டும். அதில் மூன்று காய்கள் புலிகளாகவும், மீதமுள்ள 15 காய்களை ஆடுகளாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு காய்களையும் வித்தியாசப்படுத்தும் விதத்தில் காய்களானது இருக்கவேண்டியது அவசியம்..
3 புலிகள், 15 ஆடுகள் கொண்ட இந்த விளையாட்டில் புலிகள் ஆடுகளிடம் சிறைப்படுதல் அல்லது ஆடுகளை புலிகள் விழுங்குதல் என்பது விளையாட்டின் நோக்கமாகும். ஆடுகளை ஒவ்வொன்றாக விழுங்கும் புலிகள், புலிகளை முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
1. முதலில் புலி, அடுத்து ஆடு என்று சட்டகத்தின் இணைப்புகளில் வைக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளைப் போல் இது கட்டத்துக்குள் வைக்கப்படுவதில்லை. புலிகளை அடைப்பது போல ஆடுகளை அடுக்க வேண்டும். அதை தடுப்பது போல புலிகளை நகர்த்த வேண்டும்.
2. புலிக்கு அருகில் ஆடு இருந்து அதற்கு அடுத்த கட்டம் வெற்றிடமாக இருந்தால் புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும். எனவே புலிக்கு அருகில் தொடர்ச்சியாக இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக வேண்டும்.
3. புலிகள் சிறைப்படும் போது எத்தனை ஆடுகள் விழுங்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து ஆடுகள் தரப்பில் விளையாடுபவர் புள்ளிகளைப் பெறுவார். அதுபோல புலிகளை சிறைப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளை இழந்தால் புலிகள் தரப்பில் விளையாடுபவர் வெற்றிபெறுவார்.
இவை இந்த விளையாட்டின் பொது விதிகள்.


Comments

Popular Posts