மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல் (யுரிய -வுக்கு பதிலாக)
மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல் (யுரிய -வுக்கு பதிலாக)
”ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும் குறைவு. அருகில் உள்ளா வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்) ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும்.இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி விடும்.
இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம்.
இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும் ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.
இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். இக்கரைசலில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம்.
இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் யூரியாவைக் காட்டிலும், தழைச்சத்தும் இதர சத்துக்களும் அதிகமாகவே கொடுக்கக்கூடிய, செலவு குறைந்த, இயற்கையான நுட்பங்களே. இதை எனது அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்” என்று சொன்னார் பாஸ்கரன்.
தொடர்புக்கு,
தேனாம்படுகை பாஸ்கரன்,
செல்போன்: 9442871049
மயில்வாகனன், செல்போன்: 9884904437
நன்றி : பசுமை விகடன்(25-Nov-14)
Comments
Post a Comment