Kollimalai

கடந்து இரண்டு நாட்களாக கொல்லிமலை பகுதியில் பயணம் செய்து அங்கு மலையில் வாழும் மக்களிடம் உரையாடி கொண்டிருந்ததில் தெரிந்து கொண்ட சில தகவல்கள்.
* 15 வருடங்களுக்கு முன்பு வரை இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் மூன்று விசயங்களுக்கு மட்டுமே மலையிலிருந்து கீழே சென்றுள்ளனர். அவை உடுப்பதற்கான உடை, மண் எண்ணெய், உப்பு. இவை தவிர வாழ்வதற்கும், உண்பதற்கும் தேவையான அத்துனை பொருட்களும் இங்கேயே விளைவித்து கொள்ளும் அளவுக்கு செழிப்புடன் இருந்து இருக்கிறது. இந்த செழிப்பான, பலதரப்பட்ட உணவு பொருட்களின் விளைச்சலை தற்பொழுது மெல்ல மெல்ல பண பயிர்களான குச்சி கிழங்கு, மிளகு, சில்வர் ஓக் மரங்கள் ஆக்கிரமித்து கொண்டுள்ளதனால், இப்பொழுது அத்தனை விசயங்களுக்கும் உணவு உட்பட மலையை விட்டு கீழிருக்கும் நிலப்பகுதியினை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். பழங்களையும், தானியங்களையும், பருப்பு வகைகளையும், கிழங்குகளையும், காய்களையும், நாட்டு கோழிகளையும் என இயற்கையோடு இயைந்து உணவாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து வாழ்ந்தவர்களை இன்று ரேசன் அரிசி சாப்பிட வைத்தது தான் இங்கு நிகழ்த்தபட்ட வளர்ச்சி.
* பத்து வருடங்களுக்கு முன்பு வரை வரகு, பனிவரகு, திரிவரகு, சாமை, தினை, கேழ்வரகு, காட்டு கம்பு என பலவகை சிறு தானியங்கள் இங்கு விளைவிக்க பட்டு வந்துள்ளது. ஆனால் விளைச்சலுக்கான நிலங்கள் மெல்ல மெல்ல வேறு பண பயிர்கள் ஆக்கிரமித்து விட்டதனால் தற்பொழுது வெறும் சாமை மற்றும் தினை மட்டுமே விளைவிக்கபடுகிறது. அதிலும் ஒரு சில கிராமங்களில் மட்டுமே. சுற்றி திரிந்த 5 கிராமத்தில் வால்குளிப்பட்டி என்னும் கிராமத்தினர் மட்டுமே சிறு தானியங்களை அறுவடை செய்திருந்தனர். அதுவும் சிறிய அளவில் மட்டுமே.
* ஒவ்வொரு சிறுதானியத்திலும் பலவகைகளை காண முடிந்தது. அதாவது சாமை என்பதை எடுத்து கொண்டால் திரிகுல சாமை, பச்சைமலை சாமை, வெள்ளைபெரூ சாமை, கட்டவெட்டி சாமை, புலகுருத்து சாமை என பல வகைகள். தினை எடுத்து கொண்டால் சிவப்பு தினை, வெள்ளை தினை, கோரன் தினை என பல வகைகள். கேழ்வரகு என எடுத்து கொண்டால் சுண்டாங்கி கேழ்வரகு, சாட்டை கேழ்வரகு, கார கேழ்வரகு, பெரு கேழ்வரகு, வெள்ளைமுளியான் கேழ்வரகு, கரிமுளியான் கேழ்வரகு, குருவ கேழ்வரகு என பல வகைகள்.ஒவ்வொன்டிருக்கும் தனி தனி சிறப்பம்சங்கள். மேலும் உணவு பண்டங்களை பாதுகாத்து, சேமித்து வைக்க நமது முன்னோர்கள் பயன்படுத்திய குதிர்கள் இன்னும் இவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* மேலும் கவர்ந்த ஒரு விஷயம் இங்கு நாட்டு கோழிகள் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் நாட்டு கோழிகளாக காணப்பட்டது. சிறு வயதில் நீங்கள் இந்த மண்ணில் நாட்டு வகை கோழிகள் மட்டுமே திரிந்து கிடந்த காலங்களில் அதனுடைய உணவு தேடும் வேகம், அதன் இறகில் காணப்படும் வசீகரம் மற்றும் தன்னுடைய குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்கும் நேர்த்தி ஆகியவைகளை நீங்கள் உற்று கவனித்து இருந்தால், அத்தனை அம்சங்களையும் இங்கு வளரும் கோழிகளிடம் காண முடிந்தது. நம்முடைய நாட்டு மாடுகள் எவ்வளவு வேகத்தில் குறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறதோ அதே வேகத்தில் தான் நம் நாட்டு கோழிகளும் குறைந்து வருகிறது.

Comments

Popular Posts