கடையம் திரு. பெலிக்ஸ் அவர்களின் எண்ண தொகுப்பு

கார்ப்பரேட் கோழிகளும் பண்ணை மனிதர்களும்

May 8, 2014 at 1:38pm
அனைவருக்கும் கல்வி, கல்வி பெறுவது அடிப்படை உரிமை போன்ற திட்டத்தின் கீழ் இனி இந்த நம் நாட்டில் கல்வியறிவு இல்லாதவர்கள் இல்லவே இல்லை. அனைவரும் தரமான கல்வியைப் பெற்று நம் நாட்டை விரைவில் ஒரு சிறந்த வல்லரசு நாடாக உருவாக்கிவிடுவார்கள். இன்னும் ஆறே வருடங்கள் தான் (2020) அதற்குப் பின் நாமெல்லாம் வல்லரசின் மைனர் குஞ்சுகள். அதற்காக நமது அரசு எடுக்கும் முயற்சிகள் அளப்பரியது.

கல்வியாளர்கள் மாநாட்டில் நமது கல்விமுறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், அதனை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக அரசர்களும், துணையரசர்களும், மந்திரிகளும், இன்னும் பிற அதிகாரிகளும் ஆலோசித்து வருகிறார்கள். அதாவது நடப்பு கல்விமுறை மிகவும் பின்தங்கியும் எளிதாகவும் உள்ளதாம், தற்போது நாம் அடைந்து வரும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைக்க வேண்டுமாம்.

என்னவோ எனக்கு எப்பவுமே இந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பார்க்கும்போது பிராய்லர் கோழி பண்ணைகளின் நினைப்புதான் வந்து தொலைகிறது.

பல வகையான பாடங்களை அவர்கள் மண்டைக்குள் ஏற்றி ஒரு நாள் அவற்றை இறக்கி வைத்துவிட அவற்றை மதிப்பீடு செய்து தரம் பிரித்து மாநில அளவில், மாவட்ட அளவில், பள்ளி அளவில் முதலிடம் பெறுவர்கள் மிகவும் சிறந்தவர். இவர்கள் அரசாலும், ஊடகங்களாலும், பல அமைப்புகளாலும் கௌரவிக்கப்படுகிறார்கள். தோல்வியடையும் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். பள்ளி தேர்வுகளில் தோல்வியடைவது இந்த சமுதாயத்தால் மிகவும் அவமானமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் இந்த உலகில் வாழவே தகுதியற்றவர்களாகிறார்கள்.

“Rain Rain go away” (இப்படி சொல்லியே மழைய ஒளிச்சிக்கெட்டுட்டீங்களாடா) போன்ற ரயம்ஸ்களும், அல்ஜீப்ராவும், வேதியியல் சமன்பாடுகள், இன்ன பின தேற்றங்களும், வரலாறும், புவியியலும், தெரிந்தால் தான் உயிர் வாழ முடியுமா? இயற்கையின் மகத்துவத்தைப் பற்றி நம் பள்ளி பாடங்களில் ஏதாவது ஒரு வரியாவது இருக்கிறதா? இயற்கைக்கு விரோதமாக காற்று, மண், நீர் என அனைத்தையும் எவ்வாறு கெடுப்பது என்பதைப் போதித்தும், “மரங்களை தாளாக்கி… கூழாக்கி… பாழாக்கியும்”, வளரும் சிறுவர்களுக்கு இயற்கையின் எழிலையும் அதன் பயனையும் சொல்லிக்கொடுக்காமல் காங்கரேட் கட்டடங்களுக்குள் பிராய்லர் பண்ணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இந்த கல்வியில் சிறந்தவர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் வேலை வாய்ப்பு சந்தைக்கு விலைக்குப் போய், இதுவரை தங்கள் மூளை என்ற ஹார்ட்டிஸ்கில் ஏற்றிய அனைத்தையும் ஃபார்மட் செய்துவிட்டு, அங்கே சிறந்த அடிமையாய் இருக்க தனிப்பயிற்சியையும் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வாய்மொழி, உடல்மொழி எல்லாம் மாற்றப்படுகிறது. அமெரிக்க விருந்தினருக்காக அதுவரை வீட்டில் இட்லியையும் சாம்பரையும் நல்லா பிசைஞ்சி நக்கி சாப்பிட்டவன், பீட்ஸாவையும் பர்கரையும் டிஷ்யூ பேப்பரில் வைத்து அதில் வடியும் சீஸை முகத்தில் வேறு எங்கும் படாதவாறு சாப்பிட கற்றுக்கொள்கிறான். படிக்கும்வரை ரோட்டில் நின்று பெண்களை சைட் அடித்துக்கொண்டும் அதற்காக அடிதடியில் இறங்கி சுத்த தமிழில் கெட்ட வார்த்தைகள் பேசி கொண்டிருந்தவன். இப்போது அலுவலகத்தில் சிறிய விஷயங்களுக்கும் oh shit என்கிறான், f**k என்கிறான்.
இப்படியாக வல்லரசை உருவாக்கும் பொறுப்பைப் பெற்ற மகிழ்ச்சியில் வாழ்வின் அடிப்படைகளை மறந்து ஏதோ ஒரு மாய உலகில் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க தயாராகிறார்கள்.

இங்கு ஒரு இயற்கையான விஷயத்தை இந்த கார்ப்பரேட் கலாச்சாரம் செய்கிறது. தாய் கோழி குஞ்சுகள் வளர்ந்த பின் அதை விரட்டியடிப்பது போல இந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களால் படிக்க வைக்கப்பட்டு ஏதோ தூர தேசத்திற்கோ அல்லது நகரத்திற்கோ விரட்டியடிக்கப்படுகிறார்கள். சிலர் மனைவி, குழந்தைகளையும்கூட விட்டு செல்கிறார்கள். அப்படியே இவர்கள் சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாக வாழவிட்டு விடுமா இந்த கலாச்சாரம். வேலை, சம்பள உயர்வு, ஊக்கத்தொகை, அவ்வப்போது சுற்றுலா, நட்சத்திர ஓட்டலில் ஓசி சாப்பாடு என மூளை நன்றாக கழுவி வீட்டை பற்றிய நினைப்பையே ஒவ்வொருவரின் மனதிலிருந்தும் எடுத்துவிடும். வீக்எண்ட், பண்டிக்கை என சில சந்தோஷங்கள் அவ்வப்போது போனஸாக வந்தாலும் அது களைப்பை போக்கவே சரியாக இருக்கும்.

மொத்தத்தில் “இன்றைய கல்விமுறையும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அடிமைகளையும் அநாதைகளையும் பெருமளவு உற்பத்தி செய்திருக்கிறது.” நவீன இளைஞர்கள் அடிமைகளாய் கார்ப்பரேட் நிறுவனங்களில் பல பெருநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறார்கள். அவர்களை பெற்றவர்கள் அநாதைகளாய் உள்ளூர்களில் அண்டைவீட்டார் மற்றும் வேலைக்காரர்கள் தயவில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்டையாடு சத்தம்போடுது… ஒருவித வாசனை… பிறப்புறப்பில் ஒரு வழுவழுப்பு… தன் வாலை ஆட்டுது… கிடா இப்ப ரெடியாயிருது… எல்லாம் சுபம்… அஞ்சாறு மாசத்துக்கப்பறம் ஆடு குட்டி போடுது… அதோட பிரசவத்திற்கு வேற எந்த ஆடும் உதவி செய்யல… கொஞ்ச நேரத்துல குட்டியாடு தாய் ஆடோட மடிய தேடுது தாய் ஆடும் பால் கொடுக்க தயாராயிடுது… இதெல்லாம் செய்ய இதுக எங்கேயும் போயா பயிற்சி எடுத்துத்துட்டு வந்துதுக அல்லது கூகுள்ள தேடுச்சா…?

எங்களுக்கு ஆறிறவு. நாங்கள் எவ்வளவு படிச்சிருக்கோம் தெரியுமா? இந்த உலகமே எங்கள் உள்ளங்கையில தான் இருக்கு. எங்கள் தாய் திருநாட்டை வல்லரசாக்கும் சக்தி இளைஞர்களாகிய எங்களிடம் தான் இருக்கிறது. இதற்காக நாங்கள் தினமும் பல கனவு காண்கிறோம். நாங்கள் தான் எதிர்கால உலகமே என பேசி திரிகிறோமே. மேல ஆட்டோட விஷயத்தை ஒரு தடவை மறுபடியும் படிச்சிட்டு அதுல ஏதாவது ஒன்றையாவது பயிற்சி எடுக்காமலோ அல்லது வேறு யாருடைய தயவும் இல்லாமலோ இப்போ யாராவது செய்றாங்களான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

“சிறந்த முறையில் கக்கா போவதற்கான 10 வழிமுறைகள்” என புத்தகம் எழுத எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதை படித்துதான் நிறைய பேர் அந்த கடனை செவ்வன முடித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில் மேலே சொன்ன விஷயங்கள் கொஞ்சம் ஓவர் தான். என்ன செய்ய படிப்பறிவின் மகிமை அப்படிதான் இருக்கிறது.


FB/ Pannaiyar:  மாற்று கருத்துக்கள் பல சொல்லி நம்மை சிந்திக்கவைக்கும் ஓர் அற்புதமான மனிதர் www.pannaiyar.com என்ற வலை தளத்தில்  சென்று பார்த்தால்  பல முற்போக்கான சிந்தனை  தொகுப்புகளை  கண்ணுறலாம் . இங்கே நீங்கள் படித்தது  கடையம் திரு. பெலிக்ஸ்  அவர்களின் எண்ண  தொகுப்பு. 35 சென்ட் நிலத்தில் அற்புதமான  முறையில் சுயசார்படைந்த பண்ணையம் செய்து வருகின்றார் .



Comments

Popular Posts