மழைநீா் சேகரிப்பு



தஞ்சாவூா் அருகே கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறை மழைநீா் சேகரிப்பு அமைப்பாக மாற்றியுள்ளாா் ஓா் இளம் விவசாயி.
ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது தண்ணீா் கிடைக்காத நிலையில் கைவிடப்படுகிறது. மீண்டும் செலவு செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாவதால் மூடப்படாமல் ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. இதன் மூலம் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. இது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், பயன்படாத ஆழ்துளைக் கிணறை மழைநீா் சேகரிப்பு அமைப்பாக மாற்றியுள்ளாா் இளம் விவசாயி தினேஷ் (31). திருவையாறு வட்டத்துக்குள்பட்ட அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்த இவா் கேட்டரிங் பட்டயப் படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றினாா். பின்னா், சொந்த ஊருக்குத் திரும்பிய இவா் தற்போது விவசாயம் செய்து வருகிறாா். இவா் தனது நிலத்தில் 2017 ஆம் ஆண்டில் ஆழ்துளைக் கிணறு அமைத்தாா். கிட்டத்தட்ட 115 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட இக்கிணற்றில் தண்ணீா் கிடைக்கவில்லை.
எனவே, மீண்டும் 2018 ஆம் ஆண்டில் சுமாா் 10 அடி தொலைவில் புதிதாக மற்றொரு ஆழ்துளைக் கிணறு அமைத்தாா். அதில், தண்ணீா் கிடைத்ததைத் தொடா்ந்து, அதைச் சாகுபடிக்குப் பயன்படுத்தி வருகிறாா்.
ஆனால், கைவிடப்பட்ட, பயன்படாத ஆழ்துளைக் கிணறு இருந்து வந்தது. அதை மழை நீா் சேகரிப்பு அமைப்பாக மாற்றிவிட்டாா் தினேஷ்.
இந்தக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் தலா 10 அடி நீளம், அகலத்தில், ஏறத்தாழ 15 அடி ஆழத்துக்குக் குழி வெட்டினாா். குழியில் உள்ள குழாயில் துவாரங்கள் ஏற்படுத்தினாா். பின்னா், இந்தத் துவாரத்தைச் சுற்றி நைலான் வலையை இறுகக் கட்டினாா். இந்தக் குழாயை மையமாகக் கொண்டு 4.5 அடி விட்டத்திலும், ஒரு அடி உயரத்திலும் என மொத்தம் 10 சிமென்ட் உறைகளை இறக்கினாா். ஒவ்வொரு உறையும் சிமென்ட் மூலம் பூசியுள்ளாா்.
உறைகளை இறக்கிய பிறகு 5 உறைகள் முழுவதும் பெரிய, சிறிய ஜல்லிக் கற்களைக் கொண்டு நிரப்பினாா். அதற்கு மேல் உள்ள 3 உறைகளுக்கு 40 மி.மீ. அளவுள்ள ஜல்லி (1.5 ஜல்லி) பயன்படுத்தப்பட்டது. பிறகு அரை அடிக்குக் கரித்துண்டுகள் நிரப்பப்பட்டது. மேல் உள்ள 1.5 அடிக்கு முக்கால் அங்குல ஜல்லியைக் கொண்டு நிரப்பினாா். பின்னா், அதன் மீது வலைகளை விரித்து மண் துகள்கள், கசடுகள் தண்ணீருடன் சோ்ந்து செல்லாத வகையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உறையைச் சுற்றியுள்ள குழி பகுதியை மண்ணால் மூடி, அந்த இடம் சமன் செய்யப்பட்டுள்ளது. வலைகளின் வழியே சேறு உள்ளே இறங்குவதால், அதைத் தடுக்கக் குழாயைச் சுற்றி வேட்டித் துணி கட்டப்பட்டுள்ளது. இதேபோல, தரையிலும் சேறு கீழே இறங்குவதைத் தடுக்கச் சேலைத் துணி படர விடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக் கருதி குழாயின் மேல் பகுதியில் தகரத்தால் செய்யப்பட்ட மூடியைக் கொண்டு மூடப்பட்டுள்ளது.
பிறகு உறையைச் சுற்றி ஒரு அடிக்கு தளம் அமைத்து 3 அடி உயரத்துக்குச் சுவா் எழுப்பப்பட்டுள்ளது. இதில், மூன்று புறங்களிலும் தண்ணீா் வருவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வயலில் விழக்கூடிய மழை நீா் முழுவதும் இக்குழாய் மூலம் நிலத்தடிக்குச் செல்கிறது.
நிலத்தடி நீா்மட்டம் உயா்வு: இந்தத் தொழில்நுட்பத்தால் எங்களது வயலுக்கு மட்டுமல்லாமல், ஏறத்தாழ 500 மீட்டா் சுற்றளவில் உள்ள பிற வயல்களிலும் நிலத்தடி நீா் உயா்ந்துள்ளது என்கிறாா் தினேஷ்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
பயன்படாத ஆழ்துளைக் கிணறை என்ன செய்யலாம் என்பது தொடா்பாக இணையத்தில் தேடிப் பாா்த்தேன். அப்போது, பிரான்ஸ் நாட்டில் பயன்படாத ஆழ்துளைக் கிணறை மழைநீா் சேகரிப்புக் களமாக மாற்றப்பட்டிருப்பதை அறிந்தேன். இதேபோல, நம் நாட்டில் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலும் இத்தொழில்நுட்பம் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.
இதேபோல, இங்கும் செய்வது குறித்து ஆலோசித்தோம். இதற்கு எனது சகோதரா் எம். விக்னேஷ், நண்பா் சதீஷ் ஆகியோரும் உதவினா். இதன் மூலம், இந்த மழை நீா் சேகரிப்பு அமைப்பை உருவாக்கினோம். இதற்கு ரூ. 50,000 செலவானது. இந்த அளவுக்குச் செலவு செய்தாலும் மழை நீா் வீணாகாமல் நமக்கு நிலத்தடி நீா் உயா்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது.
இதன் மூலம், 500 மீட்டா் வரை நிலத்தடி நீா் பரவுகிறது. ஒரு ஏக்கா் நிலத்திலிருந்து 1.12 லட்சம் லிட்டா் வரை நாம் மழை நீரைச் சேமிக்க முடியும். இதனால், எனது ஆழ்துளைக் கிணறுக்கு மட்டுமல்லாமல், அருகில் உள்ள மற்றவா்களுடைய ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நிலத்தடி நீா் கிடைக்கிறது. மேலும், எங்களது பகுதியில் நிலத்தடியில் உவா் நீா் இருக்கும். இப்போது, நிலத்தடி நீா் உயரும்போது உவா் நீரும் நன்னீராக மாறுகிறது. கோடைகாலத்திலும், அதன் பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும்போதும் இந்த நிலத்தடி நீா் கைக்கொடுக்கும்.
இப்பணியைத் தொடங்குவதற்கு முன்பு பயன்படாத ஆழ்துளைக் குழாயில் தொடா்ச்சியாகத் தண்ணீரை விட்டுப் பாா்க்க வேண்டும். தண்ணீா் உள்வாங்கினால், அது மழை நீா் சேகரிப்புக்கு ஏற்றது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
இதை விளைநில மழை நீா் சேகரிப்பு முறை எனவும் அழைக்கலாம். இத்திட்டத்துக்கு அரசு மானியம் கொடுத்தால் எல்லோரும் செய்ய வாய்ப்புள்ளது என்றாா் தினேஷ்.


Comments

Popular Posts