ஒரு ஏக்கரில் வருடத்திற்கு 3-4 லட்சம் அளவுக்கு மகசூல் எடுப்பது எப்படி?
ஒரு ஏக்கரில் வருடத்திற்கு 3-4 லட்சம் அளவுக்கு மகசூல் எடுப்பது எப்படி? 🤔
================================
அன்பு சொந்தங்களுக்கு வணக்கம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் போது வரவு செலவு குறித்து என்னை கேட்டபோது, சரி ,ஒரு பயிர் செய்யும் முறையையும் அதன் வரவு செலவு பற்றி சொல்ல நினைத்தேன். ஆனால் எழுத முனையும் போது நிறைய காரணிகளை மனதில் எண்ணத் தோன்றுகிறது.
1. செலவுகளை எப்படி குறைப்பது,
2. தொடர் வருவாய்க்கு என்ன வழி,
3. ஒரு கணவன் மனைவி இருவர் மட்டுமே இதை சாத்தியம் ஆக்க முடியுமா?
இந்த சிந்தனையில் உதித்த பதிவு இது.
இதற்கான preconditions சில உண்டு. அதை தெரிந்துகொண்டு பின் விவசாயம் குறித்து பேசுவோம்.
1. நேரடியாக விற்பனை செய்ய முடியும் அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்வது.
2. உடல் உழைப்பு அவசியம்.
3. முடியும் அளவுக்கு உரச்செலவு, உழைப்பை குறைப்பது.
4. தொடர்ந்து வருமானம் கிடைக்கும் படியாக பார்த்துக் கொள்வது.
5. சரியான திட்டமிடல் மிக அவசியம்.
இந்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு இனி பயிர் செய்வதில் கவனம் செலுத்துவோம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் எதை எப்படி பயிர் செய்வது?
1. 20 சென்ட் நிலத்தை காய்கறிகள் உற்பத்திக்கு, (சுமார் 9000sqft)
2. 10 சென்டில் பப்பாளி, (4500)
3. 10 சென்டில் கொய்யா,
4. 10 சென்டில் வாழை,
5.10 சென்டில் முருங்கை,
6.10 சென்டில் எலுமிச்சையும் நெல்லியும்,
7. மீதியுள்ள 30 சென்டில் தென்னை. (12500)
இனி தனித் தனியாக பயிர் செய்யும் முறைக்கு வருவோம்.
1. காய்கறிகள் (20சென்ட்)
இந்த பகுதியை இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும்.
இதில் 10'×10' அளவுக்கு செடிகள் நாற்று தயாரிப்புக்கு என ஒதுங்கி வையுங்கள்.
முதல் 10 சென்டில் கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், பீட்ரூட், முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிர் செய்ய தொடங்குவோம்.
இதில் கத்தரி, தக்காளி,வெண்டைக்காய் மூன்றும் தினசரி ஒவ்வொன்றும் சுமார் 10 கிலோ அளவுக்கு மகசூல் வரும் படியாக பயிர் செய்ய வேண்டும். பாத்தியின் கரைகளில் பீட்ரூட், முள்ளங்கி இரண்டையும் பயிர் செய்ய வேண்டும். இது குறைந்த அளவில் உற்பத்தி செய்வது நல்லது.
அடுத்து மிளகாய் ஒரு பாத்திரத்தில். இதன் உற்பத்தி பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வத்தல். விற்க முடியும் அளவுக்கு பச்சை மிளகாய், மீதி காய்ந்த மிளகாய்க்கு.
கத்தரி, தக்காளி, மிளகாய் மூன்றும் நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
சரி முதல் 10 சென்டில் காய்கறிகள் பயிர் செய்தாகிவிட்டது.
மீதி உள்ள 10 சென்ட் நிலத்தை நன்றாக கொத்திவிட்டு தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
முதல் பகுதியில் செடிகள் நடவு செய்தபின் நாற்று பாத்தியில் செடிகள் நாற்று விட்டு வையுங்கள்.
முதல் பகுதியில் செடிகள் பூக்கும் நிலையை அடைந்ததும் அடுத்த 10 சென்டில் மீண்டும் மேலே சொன்ன படி பயிரிடுங்கள்.
இது மிகவும் அவசியம். அப்போது தான் தொடர்ந்து காய்கள் அறுவடை செய்ய முடியும். முதல் பகுதியில் காய்கள் குறையும் போது அடுத்த பகுதியில் காய்கள் வரத்தொடங்கும். அடுத்து முதல் பகுதியை மீண்டும் பயிர் செய்ய தயார் செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் தொடர்ந்து தினசரி காய்கள் கிடைக்கும்.
2. பப்பாளி (10 சென்ட்)
இதையும் இரண்டாகப் பிரித்து கொள்ளுங்கள்.
5 சென்டில் சுமார் 30-35 மரங்கள் வளர்க்கலாம். மீதி 5 சென்டில் உளுந்து, பாசிப்பயறு பயிர் செய்யுங்கள். மூன்று மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும்.
பப்பாளி 8 வது மாதத்தில் இருந்து பலன் கொடுக்கும். இப்போது அடுத்த 5 சென்டில் பப்பாளி பயிர் செய்யுங்கள். முதல் பகுதியில் பலன் குறையும் போது இது பலன் கொடுக்கும். இப்படியே மாற்றி மாற்றி பயிர் செய்யும் போது தொடர்ந்து பழங்கள் கிடைக்கும்.
3. வாழை (10 சென்ட்)
சுமார் 50 மரங்கள் வளர்க்கலாம். இது 10-12 மாதங்களில் பலனை கொடுக்கும். ஊடுபயிராக தட்டைபயறு, சேனைகிழங்கு,கருணைகிழங்கு பயிர் செய்யலாம்.
4. கொய்யா (10சென்ட்)
இதை அடர்நடவு முறையில் செய்ய வேண்டும். வரிசைக்கை வரிசை 8'.
செடிக்கு செடி 6' என்று நடவு செய்யுங்கள். இப்படி நடவு செய்யும் போது சுமார் 90 செடிகள் வரும். இதை கவாத்து செய்து செடிகளை நன்றாக படர்ந்து வளரும் படி வளர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் காய்த்து முடிந்ததும் கவாத்து செய்ய வேண்டும். 15 செடிகளை முதலில் கவாத்து செய்யுங்கள். அது தளைச்சல் எடுக்கும் போதே பூக்கள் தோன்றும். அடுத்து 15 செடிகளை கவாத்து செய்யுங்கள். அது பூ எடுத்ததும் அடுத்த 15 செடிகள் என செய்யும் போது வருடம் முழுவதும் காய்கள் கிடைக்கும். இடைவெளியில் நரிப்பயறு விதைத்து விடுங்கள். இது களைகளை கட்டுப்பாட்டில் வைப்பதுடன் நல்ல உரமாகும்.
5. எலுமிச்சை 10 மரங்கள், நெல்லி 10 மரங்கள் (10 சென்ட்)
20' இடைவெளியில் நடவு செய்யுங்கள். ஊடுபயிராக பயறு வகைகளை செய்யுங்கள். இதன் கழிவுகள் நல்ல உரமாகும். அறுவடைக்கு பின் இவைகளை செடிகளுக்கு மூடாக்காக போடுங்கள். உரச்செலவு குறையும். நுண்ணுயிர்கள் பெருக்கம் இருக்கும்.
6. முருங்கை (10சென்ட்)
சுமார் 20 மரங்கள் வளர்க்கலாம்.
இடைவெளியில் சணப்பை, தக்கைப்பூண்டு ஆகிய பசுந் தாள் உரப்பயிர் வளர்த்து மூடாக்கு போடுங்கள். நல்ல உரமாகும்.
7.தென்னை (30சென்ட்)
இதில் 20 மரங்கள் வளர்க்கலாம். இடைவெளியில் மஞ்சள் ஊடுபயிராக செய்யலாம். மற்ற நேரங்களில் பூசணிக்காய் பயிர் செய்யலாம்.
ஒரு வழியாக பயிர் செய்யும் முறையை புரிந்து கொண்டோம்.
இனி வருமானம் குறித்து பார்ப்போம்.
இதில் முதலில் வருமானம் தருவது காய்கறிகள் தான்.
ஒவ்வொரு வகையிலும் 10 கிலோ என சுமாராக 50 கிலோ காய்கள் கிடைக்கும்.
முருங்கை கீரை ஒரு 10 கட்டு.
அருகில் இருக்கும் உழவர்சந்தையில் விற்பனை செய்வது எளிதாக இருக்கும்.
சராசரியாக கிலோ ₹15 என எடுத்துக் கொண்டால் 50கிலோ காய்கள் சுமார் ₹750 கொடுக்கும். கீரை 10 கட்டுகள் ₹100 கிடைக்கும்.
ஆக மொத்தத்தில் ₹850 தினசரி கிடைக்கும்.
அடுத்து கிடைப்பது பப்பாளி. இது நடவு செய்த 8வது மாதத்தில் இருந்து பலன் கிடைக்கும். சுமாராக 20 கிலோ தினசரி என வைத்துக் கொள்வோம். இதை எளிதாக விற்பனை செய்ய முடியும். இன்றைய விலை கிலோ ₹25.
விலை ₹15 என எடுத்துக் கொண்டாலும் ₹350 கிடைக்கும்.
அடுத்தது வாழை . ஒரு வருடத்தில் பலன் கிடைக்கும்.
50 வாழை மூலம் (50×300) ₹15000 ஒரு வருடத்தில் கிடைக்கும்.
அடுத்து முருங்கை. இதன் மூலம் வருடம் சுமாராக ₹10000 கிடைக்கும். (20×500)
அடுத்தது கொய்யா. இது இரண்டாவது வருடம் முதல் பலன் கிடைக்கும்.
90 செடிகள். ஒரு செடியில் இருந்து 10-15 கிலோ கிடைக்கும். நாம் 10 கிலோ என எடுத்துக் கொண்டால் சுமார் ஒரு டன் மகசூல் கிடைக்கும். தற்போதைய விலை கிலோவுக்கு ₹45.
₹25 என வைத்துக் கொண்டாலும் வருவாய் ₹25000.
அடுத்தது எலுமிச்சையும், நெல்லியும் தான்.
மூன்று ஆண்டுகள் கழித்து 20 மரங்கள் மூலம் சுமார் ₹20000 கிடைக்கும்.
தொடர்ந்து வருவது தென்னை. இது 5ஆண்டுகளில் பலன் கிடைக்கும்.
ஒரு மரம் நன்றாக பராமரித்தால் 200 காய்கள் கொடுக்கும். 20 மரங்களில் 4000 காய்கள். காய் ₹10 என்றாலும் வரவு ₹40000.
வருவாய் கணக்கு:
1.காய்கள்.
தினசரி 50 கிலோ. வருடத்தில் 300 நாட்கள் மட்டும் என வைத்துக் கொள்வோம்.
முருங்கை கீரை 10 கட்டுகள்.
காய்கள் 50×15×300 = ₹225000-
கீரை = 30000- ₹255000
பப்பாளி 20×15×300--------------------------- ₹ 90000
கொய்யா 1000×25 ₹ 25000
வாழை 50×300 ₹ 15000
முருங்கை 20×500 ₹ 10000
எலுமிச்சை,நெல்லி 20×1000 ₹ 20000
தென்னை ₹ 40000
ஊடுபயிர்கள் வழியாக ₹ 10000
----------------
மொத்தம் ₹465000
----------------
இதை குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி இருவர்மட்டுமே செய்து கொள்ள இயலும். செலவை குறைக்கும் வகையில் இந்த செயல் முறை அமைக்கப் பட்டுள்ளது.
அதிக பட்சமாக₹165000 செலவு என வைத்துக் கொள்வோம். நிகரமாக ₹300000 வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Comments
Post a Comment