கொத்துக் கொத்தாய் முருங்கைக் காய்கள்... பஞ்சகவ்யாவின் மகிமை!















ஒன்றரை வருஷத்துல... என் வீட்டுலயும்... முருங்கை... காய்ச்சு குலுங்க ஆரம்பிச்சது... அப்போ தான் பஞ்சகவ்யாவோட மகிமையை... நான் புரிஞ்சுக்கிட்டேன்...



பஞ்சகவ்யா... , தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்,.. ஈரோடு மாவட்டம், பரஞ்சேர்வழி அடுத்துள்ள நல்லூர்பாளையம்... கிராமத்தைச் சேர்ந்த ‘இயற்கை ஆர்வலர்’ பார்த்திபன்....

இவருக்கு ‘பாமர தீபம்’ பார்த்திபன் என்கிற அடைமொழிப் பெயரும் உண்டு.

அவர் சொல்வதைக் கேட்போமா....

“எனக்கு நேரம் கிடைக்கிற போதெல்லாம் என்னோட அத்தை வீட்டுக்கு போய் அவங்களை பாத்துட்டு வருவேன். அப்படி ஒருமுறை போயிருந்தப்போ, முருங்கைக்காய் சாம்பார் வெச்சு மதிய சாப்பாடு கொடுத்தாங்க. அது அபாரமான ருசியா இருந்துச்சு. நிறையக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். அப்போ, அந்த காய் எந்த ஊர் காய்னு விசாரிச்சப்போ... ‘இது சந்தையில வாங்கினது இல்லை. ஆஸ்பத்திரியில இருந்து வந்தது’னு சொன்ன அத்தை,

‘உடம்புக்கு கொஞ்சம் முடியலை. அதனால, கொடுமுடி ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்க ஆஸ்பத்திரி தோட்டத்துல இருந்த முருங்கை மரத்துல ஜடை ஜடையா காய் தொங்கிட்டு இருந்திச்சு. அது குறித்து டாக்டர். நடராஜன்கிட்ட கேட்டப்போ, பஞ்சகவ்யாவில் விளைஞ்ச முருங்கைக்காய்னு சொல்லி கொஞ்சம் காய் கொடுத்தார். அதுதான் இது’னு சொன்னாங்க.

அந்த முருங்கை மரத்துல ஒரு குச்சியை உடைச்சிட்டு வரணும்னு நினைச்சு... சாப்பிட்ட கையோட, ஆஸ்பத்திரிக்கு போய்ட்டேன். அங்க முருங்கை மரங்களைப் பார்த்து அசந்து போய்ட்டேன். நூத்துக்கணக்கான பச்சைப் பாம்புகள் தொங்கற மாதிரி தரைய தொடுற அளவுக்கு காய்கள் தொங்குச்சு. டாக்டர் நடராஜன்கிட்ட முருங்கை குறித்து கேட்டேன்.

அப்பதான் பஞ்சகவ்யா குறித்து டாக்டர் எனக்குச் சொன்னார். அதைத் தயாரிக்கிற முறை, பயன்படுத்துற முறை, அதோட பலன்கள் எல்லாத்தையும் விலாவாரியா பொறுமையா சொல்லிக் கொடுத்து முருங்கை விதைக் குச்சிகளையும் கொடுத்து அனுப்பினார். அந்த விதைக்குச்சிகளை நட்டு... பஞ்சகவ்யா தயாரிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒன்றரை வருஷத்துல என் வீட்டுலயும் முருங்கை காய்ச்சு குலுங்க ஆரம்பிச்சது. அப்போதான் பஞ்சகவ்யாவோட மகிமையை நான் புரிஞ்சுக்கிட்டேன்.

எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் உண்டு. ஒரு நாளைக்கு மூணு பாக்கெட் சிகரெட் பிடிச்சுடுவேன். அதனால, எனக்கு தொண்டையில வலி வந்து எரிச்சல் ஏற்பட்டுடுச்சு. உள்ளூர்ல பார்த்த வைத்தியத்துக்கெல்லாம் பலனில்லை. ஒரு டாக்டர் மூலமா, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்குப் போனப்போ, சோதனை பண்ணிட்டு... எனக்கு உணவுப்பாதையில புற்று நோய் அறிகுறி இருக்குனு சொன்னாங்க. அதுக்கு சிகரெட் முக்கிய காரணம்னும் சொன்னாங்க. அப்போ, இருந்து சிகரெட்டை விட்டுட்டேன். தொடர்ந்து மருந்துகளை எடுக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் குடல் புண் முழுமையா ஆறலை.

அந்த சமயத்துலதான், கொடுமுடி டாக்டர் மூலமா, நம்மாழ்வார் அய்யா நடை பயணம் தொடங்கப் போறார்ங்கிற தகவல் கிடைச்சது. பவானி சாகர் அணையில் தொடங்கி கொடுமுடியில் முடிஞ்ச, அந்த ஒரு மாச இயற்கை விழிப்பு உணர்வு நடை பயணத்தில் நானும் கலந்துக்கிட்டேன். அப்போதான் அய்யாகிட்ட நெருங்கிப் பழகுற வாய்ப்பு கிடைச்சது. அப்போ, என்னோட புற்று நோய் பிரச்னையையும் அவர் தெரிஞ்சுக்கிட்டார்.

அவர்தான், ‘இயற்கை வாழ்வியல் முறைக்கு மாறிடுங்க, வந்த நோய்களையும் வரப்போகும் நோய்களையும் தடுக்கும் சக்தி அதுக்கு உண்டு’னு சொல்லி, திருநெல்வேலி, சிவசைலம் இயற்கை வாழ்வியல் மருத்துவமனை குறித்து சொன்னார்.

அந்த மருத்துவமனை போய் தங்கி இயற்கை வாழ்வியல் முறையில இணைஞ்சுட்டேன். படிப்படியாக, என்னோட நோய் குறையத் தொடங்கிடுச்சு. குடல் எரிச்சல் நின்னே போச்சு. அதனால, இயற்கை வாழ்வியல் மேல அதீத ஈர்ப்பு ஏற்பட்டுடுச்சு. அதனால, என்னை முழு நேர ஊழியனா இயற்கைகிட்ட ஒப்படைச்சுட்டேன். நிறைய விவசாயிகள்ட்ட பஞ்சகவ்யாவைக் கொண்டு சேர்த்திட்டிருக்கேன்.

கொடுமுடி டாக்டர், என்னை ‘பஞ்சகவ்யா பக்தர்’னுதான் கூப்பிடுறாரு. புத்தருக்கு போதி மரத்தடியில ஞானம் கிடைச்ச மாதிரி எனக்கு முருங்கை மரத்தடியில ஞானம் கிடைச்சிருக்கு. பஞ்சகவ்யாவில் விளைஞ்ச முருங்கைக்காய் ருசியாலதான் அதைத்தேடி போனேன். பஞ்சகவ்யா மூலமா நம்மாழ்வார் அய்யா அறிமுகமானார். அவர் மூலமா இயற்கை மருத்துவமனை அறிமுகம். அதுமூலமாத்தான் என் நோய் குணமாச்சு. ஆக, என் நோய் தீர காரணம் பஞ்சகவ்யாதான் “என்றபடி விடைகொடுத்தார்

தொடர்புக்கு,
பார்த்திபன்,
செல்போன்: 94433-05011.

இப்படிதான் தயாரிக்கணும் பஞ்சகவ்யா!

பஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.

(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒருவாரம் கழித்து திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதை பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.)

முதல் நாள் செய்யவேண்டியது

5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யை கலந்து நன்றாக பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும்.

நான்காவது நாள் மூடியை திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்கவேண்டும்.

3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்றவேண்டும். நாட்டு சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கலக்கி விடவேண்டும் கலக்கிய பின் மூடிவைக்கவேண்டியது முக்கியம்.

11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி தொடர்ந்து 7 நாட்கள் இருவேளை கலக்கி வர வேண்டும்.

19வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

பஞ்சகவ்யா கரைசலை 6 மாதம் வரை வைத்திருக்கலாம், வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாகி பாகு தன்மை ஏற்படும் பட்சத்தில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை தண்ணீரை கரைசலுக்குள் ஊற்றினால் மீண்டும் திரவ நிலைக்கு வந்துவிடும்.

பயன்படுத்தும் முறை

தெளிப்பு மற்றும் பாசன நீர்வழி உரமாக எல்லாவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்கு பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

15 நாட்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் பயிருக்கு தெளிக்கவேண்டும்.

தெளிப்பு உரமாக பயன்படுத்தும்போது கண்டிப்பாக கரைசலை வடிகட்டிய பிறகுதான் தெளிப்பு செய்யவேண்டும்.

விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.

முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுக்களை நனைத்து நிழலில் உலரவைத்து நடவு செய்யவேண்டும்,

இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத் திறன் அதிகரிக்கும். நாற்றுக்களில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

இந்த பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துக்களை பயிர்களுக்கு கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும், நுண்ணூட்ட சத்துக்களை வேர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அமுத சுரபியாகவும் இருக்கும் ...

Comments

Popular Posts