வற்றாத வெள்ளாமைக்கு வழி
Posted: 26 Dec 2017 04:17 AM PST
பாழடைந்த
கிணறுகளை மண் கொட்டி மூடிவிடாமல், பாதுகாத்து அதில் முறையாக மழை நீரைச்
சேகரித்து வறட்சியிலும் வற்றாத வெள்ளாமைக்கு வழிகாட்ட முடியும் என்பதை
நிரூபித்துக் காட்டி வருகிறார் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த
கீழ்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா. 44 வயதான அவர், தனது
முப்பாட்டனார் விட்டுச் சென்ற 5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களை சாகுபடி
செய்து, எளிய தொழில்நுட்பத்தைக் கையாண்டு முன்னோடி விவசாயி யாகத்
திகழ்கிறார். பருவமழை பொய்த்த நிலையில், விவசாயம் செய்யப் போதிய தண்ணீர்
இல்லை, வேளாண் பணிக்கு ஆள்கள் கிடைப்பதில்லை, இடுபொருள்களின் விலையேற்றம்,
விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை போன்ற காரணங்களால்
சாகுபடித் தொழிலைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர் விவசாயிகள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராஜாவை போன்ற விவசாயிகள் சிலர் விவசாயத்
தொழிலைக் கைவிடாமல் எளிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியில்
சாதனை படைத்து வருகின்றனர். இதுகுறித்த தனது அனுபவங்களை விவசாயி ராஜா,
எமது செய்தியாளரிடம் கூறியது: மாநில அளவில் வெயிலுக்கு பேர் போன வேலூருக்கு
அருகில் ஆந்திர மாநில எல்லையில், பொன்னை ஆற்றுப் பாசனத்தின் கீழ் உள்ள
பள்ளேரி எனது சொந்தக் கிராமம். இங்கு எனது மூதாதையர் விட்டுச் சென்ற சுமார்
5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
பொட்டல் காடுதான். விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 300 அடி
ஆழம் வரை சென்று விட்டது. நீராதாரம் இன்றி வானம் பார்த்த பூமியாக உள்ள
விளை நிலங்களை ஏராளம்.
ஆனால்
எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தின் மத்தியில் எங்கள் முப்பாட்டனார்
காலத்தில் வெட்டிய 60 அடி ஆழ வட்டக் கிணற்றில் இந்த கோடை வறட்சியிலும்
சுமார் 18 அடி ஆழத்திலேயே தண்ணீர் உள்ளது. இங்குள்ள எனது 5 ஏக்கர்
நிலத்தையும், ஒரு சென்ட் கூட தரிசாக வைக்காமல் ஆண்டு முழுவதும் பலவகை
பயிர்களுடன் ஊடுபயிர்களை யும் சேர்த்து, சாகுபடி செய்து நிறைவான வருவாய்
ஈட்டி வருகிறோம். 5 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் பந்தல் பாகல், ஒரு ஏக்கர்
செடி முருங்கை அதில் ஊடு பயிராக பப்பாளி, மல்லி, 1.40 ஏக்கரில் மா, அதில்
ஊடு பயிராக பச்சை மிளகாய், அகத்தி, 60 சென்ட் ராகி, ஒரு ஏக்கர் நெல்
எனவும், வரப்பு ஓரங்களில் தென்னை, கிணற்றைச் சுற்றி மூலிகைகள், மாடுகளுக்கு
தீவனம் என இயற்கை வழியில் விவசாயம் செய்து வருகிறேன். இங்கு விளையும்
அனைத்துக் காய்கறிகளும் காட்பாடி உழவர் சந்தை, ராணிப்பேட்டை வாரச்
சந்தைக்கு அனுப்பி வைக்கிறோம். மேலும் நிலத்திற்கே நேரடியாக வந்தும்
வாங்கிச் செல்கின்றனர். எந்தக் காரணத்தைக் கொண்டும் கோயம்பேடு மொத்த
காய்கறிச் சந்தைக்கு அனுப்புவது இல்லை, ஏனென்றால் விவசாயிகளின்
விளைபொருள்கள் கிலோ ரூ.10-க்கு விலை விற்றாலும் ரூ.10 தரகுத் தொகை தர
வேண்டும், அதே விளைபொருள் ரூ.100-க்கு விற்றாலும் ரூ.10 தரகுத் தொகைத் தர
வேண்டும்.
இது
போன்ற பகல் கொள்ளை உழவர் சந்தையிலும், வாரச் சந்தையிலும் இல்லை. இங்கு
தரத்திற்கேற்ற விலை, எடைக்கு ஏற்ற பணம், நிம்மதியான வியாபாரம். விவசாயம்
செய்ய தண்ணீர் அவசியம். ஆனால் அந்தத் தண்ணீரை மனிதனால் உற்பத்தி செய்ய
முடியாது. அது இயற்கை தரும் கொடை. அத்தகைய மழைநீரை ஒரு சொட்டுக்கூட
வீணாக்காமல் நமது நிலத்தில் உள்ள பாழடைந்து பயன்பாடு இல்லாமல் இருக்கும்
பாசன கிணற்றில் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி ஆண்டு முழுவதும்
பயிர் செய்யத் தேவையான தண்ணீரைப் பெறலாம். இந்த எளிமையான தொழில் நுட்பத்தை
குறைந்த செலவில் விவசாயிகளே செய்து ஆண்டு முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை
இன்றி சாகுபடி செய்து பணம் ஈட்டலாம். அதேபோல் பழைய விவசாயக் கருவிகளான
ஏர்க் கலப்பை, பரம்பு, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டக் கருவிகளை
முன்னோர்களின் நினைவாக வீட்டில் வைத்துவிட்டு, நவீன விவசாயக் கருவிகளைப்
பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். மேலும்
விவசாய வேலைக்கு ஆள்கள் வருவதில்லை எனக் கூறுகிறார்கள். ஆனால் எனது விவசாய
நிலத்தில் ஆண்டு முழுவதும் வேலைக்கு ஆள் வருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும்
சுமார் 800 ஆள்கள் வேலை செய்துள்ளனர். வேலை முடிந்தவுடன் அவர்களுக்கான
அன்றைய ஊதியத்தை உடனே வழங்குங்கள், கண்டிப்பாக வேலைக்கு ஆள்கள்
கிடைப்பார்கள். இதுபோன்ற சின்ன, சின்ன மாற்றங்களை செய்து பாருங்கள்,
விவசாயம் எளிதான தொழிலாக, லாபகரமான தொழிலாக, அனைவரின் பசியைப் போக்கும்
உன்னதமான தொழிலாக மாறிவிடும். இதை கைவிட்டுச் செல்லாதீர்கள் என்றார் ராஜா.
விவசாயி ராஜா 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். திருமணமாகி மனைவி,
மகன், மகளுடன் வசிக்கிறார். தனது பிள்ளைகள் இருவரையும் வேலூர் விஐடி
பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிக்க வைத்து வருகிறார். வருங்காலத்தில்
அவர்களையும் விவசாயத்தில் ஈடுபட வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்
ராஜா.
ராஜா,
பள்ளேரி,
வேலூர்.
தொடர்பு எண்: 9245150084
பள்ளேரி,
வேலூர்.
தொடர்பு எண்: 9245150084
Comments
Post a Comment