சுரைச்செடி



Posted: 26 Dec 2017 04:23 AM PST
நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள் கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன. அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன.
அதில் இரண்டு முட்டை களை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன்.
இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது. மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு நித்திரை வந்து விட்டுது போலும், சித்திரை முடிய செடிகளும் நித்திரையில் ஆழ்ந்து விட்டன. அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும் இந்த வருட ஆடியில் முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.
இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.

Comments

Popular Posts