கெட்டுப்போன குளங்களை மீட்டெடுக்க முடியும்





நீர் எழுத்து – 31
வெறும் இரண்டாயிரம் ரூபாய் செலவில் கெட்டுப்போன குளங்களை மீட்டெடுக்க முடியும் என்றால் நம்புவீர்களா? பல குளங்கள் இவ்வாறு மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. கெட்டுப்போன குளங்களின் தரையானது கடினமாக இறுகிப்போய் இருக்கும். இதனால் குளத்துநீரும் கடினநீராக மாறியிருக்கும். இக்கடின நீரை மென்னீராக மாற்றினால் குளத்தை மீட்டெடுத்துவிட முடியும். இதற்கு இரு வழிகள் உள்ளன.
அசோலா பாசி:
கடினநீரை மென்னீராக மாற்றும் இயல்பு அசோலா பாசிக்கு உண்டு. அசோலாவில் உள்ள ‘ரைசோபா’ என்கிற செல்கள் குளத்தின் அடிப்பகுதிக்கு சென்று கடினமான தரைப்பகுதியை இலகுவாக்கும் வேலையையும் செய்யும். இதனால் அத்தரையிலுள்ள நைட்ரேட் உடைந்து, அது நைட்ரஜனாகவும் உயிர்வளி (ஆக்சிஜன்) ஆகவும் பிரியும். இதில் நைட்ரஜன் அடியிலுள்ள நுண்ணுயிர்களுக்கு உரமாக மாறும். உயிர்வளி நீருடன் இணைந்துவிடும். இத்துடன் கனிமங்களையும் தனது வேர்ப்பகுதியில் அசோலா உறிஞ்சிக் கொள்ளும். உயிர்வளியின் அளவு அதிகரிப்பதால் கடினநீர் மீண்டும் நன்னீராக மாறும். ஆனால். இது உடனடியாக நடக்காது. ஒரு சில மாதங்களாகும். திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் உள்ள நாகைய சமுத்திரம் எனும் குளம் இவ்வாறு மீட்கப்பட்டதொரு குளமாகும்.
ஈஎம் கரைசல் (EM - Effective Micro-organism)
கெட்டுப்போன குளத்தை நன்னீர்க் குளமாக மாற்ற சிறந்தவழி ஈ எம் கரைசலைப் பயன்படுத்துவதே. இயற்கை உழவர்கள் இக்கரைசலைக் குறித்து நன்கு அறிவர். வெறும் மூன்று லிட்டர் ஈஎம் கரைசலைப் பயன்படுத்தி ஒரு குளத்தை மீட்டெடுத்து விடலாம். அப்படி மீட்கும் வழிமுறைகள் இதோ:
கோடையில் குளத்தில் தண்ணீர் இல்லாதபோது இதைத் தொடங்கலாம். தற்போது சரியான காலம். வாய்ப்பு இருந்தால் குளத்தை உழுதுக் கொள்ளுதலோ அல்லது தூர் வாருதலோ நலம். இதனால் குளத்தின் கடினத்தரை அகற்றப்பட்டு நல்ல பலனைத் தரும். பின் குளத்தில் ஊறிக்கிடக்கும் நீரில் ஒரு லிட்டர் ஈஎம் கரைசலை ஊற்ற வேண்டும். இதற்குப் பின் தென்மேற்குப் பருவமழைப் பெய்துக் குளத்தில் சிறிது நீர் அதிகரிக்கும்போது இரண்டாவது லிட்டர் கரைசலை ஊற்றவும். இறுதியாக வடகிழக்குப் பருவமழைப் பெய்துக் குளம் நிறைகையில் மூன்றாவது லிட்டரை ஊற்றவும்.
குளத்து நீரிலிருந்த கெடுமணம் நீங்க தொடங்கினால் கரைசல் வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்று புரிந்துக் கொள்ளலாம். மேலும் ஒருகாலத்தில் கெட்டுப்போன குளத்தால் விரட்டப்பட்டிருந்த கொக்குகள் குருகுகள் போன்ற பறவைகள் கூட்டம் மீண்டும் குளத்தை மொய்த்தால் குளத்து நீர் நன்னீராக மாறிவிட்டது எனப் பொருள். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 16 சாக்கடைக் குளங்கள் இப்படி நன்னீர் குளங்களாக மீட்கப்பட்டுள்ளன. இதில் முதன்மையானது திண்டுக்கல் சிலுவாத்தூர் சாலை பெரிய குளமாகும் என்கிறார் செ. பிரிட்டோராஜ் அவர்கள். இவர் திண்டுக்கல்லில் வேளாண் நீர்வடி முகமைப் பொறியாளராகப் பணியாற்றும் சமூக அக்கறை மிகுந்த அதிகாரி.
ஈஎம் கரைசல் இயற்கை அங்காடிகளில் எளிதாகக் கிடைக்கிறது. ஆரோவில் ஈகோ-புரோ அமைப்பிலும் இது கிடைக்கிறது. லிட்டர் 650 ரூபாய் வரை ஆகிறது. ஆனால் இக்கரைசலை சொந்தமாகவும் நாம் தயாரிக்க முடியும். 20 லிட்டர் கொள்ளளவுள்ள கலன் ஒன்றில் 17 லிட்டர் குளோரின் கலவாத நீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சிப் பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலக்கவும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை (முதல்முறை தயாரிக்கும்போது, வெளியிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். அடுத்தமுறை நாம் தயாரிக்கும், இ.எம் கரைசலையே பயன்படுத்திக் கொள்ளலாம்) கலந்து.. மூடி, வெயில் படாத இடத்தில் கலனை வைத்துவிட வேண்டும். தினமும் ஒருமுறை, மூடியை லேசாகத் திறந்து மீத்தேன் வளியை வெளியேற்றி உடனே மூடிவிட வேண்டும். இதனால், நொதிக்கும் திறன் அதிகரிக்கும். 10 நாள் கழித்து மூடியைத் திறந்துப் பார்த்தால், மேல் பகுதியில், வெள்ளை நிற ஏடு போன்று படிந்திருக்கும். நல்ல மணம் வீசும். இக்கலவைதான் செறிவூட்டப்பட்ட திறன்மிகு நுண்ணுயிரி (ஈ.எம்) ஆகும்.
ஈஎம் கரைசலை சொந்தமாகவும் செய்யலாம். இரண்டு கிலோ வெல்லம், ஒரு பறங்கிக்காய், ஐந்து வாழைப்பழங்கள், இரு பப்பாளிப் பழங்கள் அனைத்தையும் கூழாகக் கரைத்து, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்துக் கொள்ளவும். பானையிலோ அல்லது ஞெகிலிக் கலனிலோ இவைகளை வைத்து மண்ணிற்குள் புதைத்து வைக்கவும். ஞெகிலிக் கலனைப் பயன்படுத்தும்போது இரு நாட்களுக்கு ஒருமுறை இதனைத் திறந்து மூடவேண்டும். நொதித்தலினால் உண்டாகும் மீத்தேன்வளி வெளியேறும். பானையைத் துணிக்கட்டி உபயோகித்தால் இதனைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமாக 20 நாட்களில் ஈ.எம் கரைசல் அணியமாகிவிடும். ஆனால் 15 நாட்கள் கழித்துத் திறந்துப் பார்க்கும்போது கலவையின் மீது வெண்மையான நிறம் தோன்றியிருந்தால் ஈ.எம். நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று பொருள். அப்படி இல்லாவிட்டால், ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரையைப் போட்டு மூடிவைத்து விடவும். அடுத்த 15-ம் நாள் அதாவது 30-ம் நாள் ஈ.எம் கரைசல் அணியமாகிவிடும்.
3 லிட்டர் ஈஎம் கரைசலை நேரடியாகக் கடையில் வாங்கினாலே ரூபாய் இரண்டாயிரத்துக்குள்தான் செலவாகும். இப்படிதான் பல குளங்களை மீட்க உதவி செய்துள்ளார் பிரிட்டோ ராஜ் அவர்கள். மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் இவரைத் தொடர்புக் கொள்ளலாம். கைப்பேசி: 9944450552.
ஆரோவில் ஈகோ-புரோ ஈ எம் கரைசல் (Maple EM.1 Effluclean - Ind. Effluent & Sewage) வாங்க தொடர்பு எண்: 0413-2622469, 0413 -2906482, கைப்பேசி: 9442300573.


நன்றி : நக்கீரன் நக்கீரன்/முகநூல் பதிவு

Comments

Popular Posts