Alwar Narayanan
Alwar Narayanan on FB
வெள்ளைக்காரன் சொன்னால் வேதவாக்கு, இந்தியன் சொன்னால் பிற்போக்கு, பழமைவாதி என்று கையில் எதோ ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு மேதாவிகள் போல அலைகிறது ஒரு பகுத்தறிவு கூட்டம்.
கால்சராயில் பாஸ்போர்ட்டோடு அலையும் இன்னொரு மேட்டுக்குடி வர்க்கமோ அமெரிக்க சோளமாவை உருட்டிதின்று கொண்டே சதா இந்திய பாரம்பரியத்தை பழித்துப்பேசிக்கொண்டு திரிகின்றது.
இவர்களுக்கு நடுவில் சிக்கினார் இயற்கை ஆர்வலர் நம்மாழ்வார்.
அய்யோ பாவம். கழிசடையான குப்பை உணவில் அஜினோமோட்டோவை கலந்து வளர்சிதை மாற்ற நோய்களோடு மன நோய்க்கும் கொண்டுசேர்க்கும் உணவை அழகான அச்சிட்ட நெகிழியிலடைத்து, விஷக்காற்றை நிரப்பி, அட்டையில் வண்ணப்படத்துடனும், அட்டவணையுடனும் கொடுத்தால் தானும் கேட்டு நாலுபேருக்கும் கொடுத்து நக்கித்தின்னும் ஜென்மங்கள்.
பஞ்சகவ்யாவை பழிப்பதுபோன்ற ஒரு தொனி தென்பட்டதால் இந்த பதிவு. ஒரு மோர் குடித்தாலே பல நூறு ரசாயன மாறுதல் நடக்கும் உடலில், பிரியாணி சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் ?. அதை அவதானித்துக்கொண்டா இருக்கமுடியும் ? இல்லை தெரிந்துதான் சாப்பிடவேண்டுமா ? இது ஒரு வாழ்வியல்.
ஒரு சிறிய உதாரணத்தோடு இந்த வெகுசன அறிவியலை புரிந்துகொள்வோம்.
செடி பச்சையாக வளர நைட்ரஜன் தேவை. இதற்காக ரசாயன விவசாயிகள் யூரியா போடுகின்றனர். இந்த நைட்டிரஜன்தான் வெடிகுண்டு தயாரிக்கவும் பயன்படுகிறது. யூரியா வந்த கதையே அப்படித்தான்.
ஆனால் இயற்கை விவசாயிகள் இயற்கையின் துணையோடு சிலவற்றை செய்யவேண்டும். நாம் சுவாசிக்கும் வளிமண்டலக் காற்றில் டைநைட்ரசனின் செழுமை 78 % அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. வளி மண்டலத்தில் உள்ள நைட்ரசனை தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அதாவது அமோனியாவாக முதலில் நிலை நிறுத்தப்படவேண்டும். மின்னல் அடிக்கும்போது இது கொஞ்சம் உருவாகிறது. ஆனால் பெருவாரியாக மண்ணிலுள்ள பாக்டீரியாக்களால் நிலை நிறுத்தப்படுகிறது.
காடுகளிலும், பொட்டல்களிலும் உள்ள மரங்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கின்றன ? அவற்றுக்கு தேவையான நைட்டிரஜனை தருவதற்கு அதன் வேர்களில் முடிச்சாக ஒட்டிக்கொண்டு கோடிக்கணக்கில் ரைசோபியம் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை வேர்ச்சத்தை எடுத்துக்கொண்டு நைட்டிரஜனை காற்றிலிருந்து உறிஞ்சி தண்ணீரில் கரையும்படி செய்கின்றன. இப்படி மரமும் நுண்ணயிர்களும் ஒட்டி உறவாடுகின்றன.
விவசாய நிலங்களில் நெல் பயிரிட்டு முடிந்தவுடன் காராமணி, வேர்க்கடலை போன்ற பயிர்களை விதைப்பது இதனால்தான். இவற்றின் வேரில் இந்த நுண்ணுயிர்கள் தாமாக உருவாகி நைட்டிரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகப்படுத்துவதுதான் பஞ்சகவ்யா. இதற்கான துவக்க நிலை நுண்ணயிர்கள் தோட்டத்து மண்ணிலிருந்து நாட்டுப்பசுவின் சாணத்திலிருந்து பெறப்படுகின்றது. மாட்டு சிறுநீரில் யூரியா உள்ளது.
பஞ்சகவ்யாவில் தோட்டத்து மண்ணை கொஞ்சம் சேர்த்து, சாணியில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவாக வெல்லத்தையும், பால்/தயிரையும் சேர்க்கும்போது இந்த இடு பொருட்களில் உள்ள கொழுப்பு மற்றும் புரதம் இந்த நுண்ணயிர்களால் சத்துக்களாக உடைக்கப்பட்டு (ஜீரணிக்கப்பட்டு) அவற்றை உண்டு பல்கி பெருகுகின்றன. இந்த தண்ணீரை மண்ணில் தெளிக்கும்போது அவை பெருகி நைட்டிரஜனை மண்ணில் இறுத்துகின்றன.
அதேபோல மீன் அமினோ அமிலத்தில் புரோட்டீன்களில் உள்ள நைட்ரசன் விலங்குளில் நிகழும் வளர்சிதை மாற்றத்தால், பொதுவாக, யூரியாவாக வெளியேறுகிறது. இந்த யூரியாவும் நுண்ணயிர்களின் உதவியால் நொதிப்பதால் பயன்பாட்டிற்கு வருகின்றன.
இவ்வளவுதான் கதை. சாம்பார் சாப்பிட சமையல் தெரிந்திருக்கவேண்டாம். அரையுடம்போடு தாடி மழிக்காதவன் காட்டுமிராண்டியுமில்ல, எண்ணெய் பாக்காத பரட்ட தலையெல்லாம் அறிவாளியுமில்லை.
Comments
Post a Comment