கால்நடை மருத்துவம்

கால்நடை மருத்துவம் என்கிற துறை இன்றடைந்திருக்கும் வளர்ச்சியும் விரிவும் இன்றியமையாதவை. மனித மருத்துவம் போன்றே இன்று கால்நடை மருத்துவத்திலும் நிறைய மைல்கல்கள் இந்நூற்றாண்டில் எட்டப்பட்டுள்ளன. ஆனாலும், அத்துறையில் உண்டாகியுள்ள சில போதாமைகளையும் நாம் அனுபவப்பூர்வமாக அறியநேர்ந்துள்ளோம். ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றி, முயல் உள்ளிட்ட கால்நடைப் பிராணிகளும் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்புயிரிகளும் இன்று பலவிதமான நோய்களை அடைந்து, அதற்குகந்த மருத்துவமுறைகளால் சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வருகின்றன. பெரு மற்றும் சிறுநகரங்களில், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் பரவல் எளிதில் அணுக்கக்கூடியதாக உள்ளன. ஆனால், கிராமங்களில் அந்தநிலை இன்னும் உரிய தன்னிறைவை அடையவில்லை என்பதையே நிதர்சனங்கள் காட்டுகிறது.

பாரம்பரியமான கால்நடை மருத்துவ முறைகளைக்கொண்ட பண்பாட்டுப் பின்புலம் இந்திய தேசத்தில் பன்னெடுங்காலமாகவே மரபுரீதியாகவே இருந்துவருகிறது. செவிவழி ஞானமாக அந்த வைத்தியக்குறிப்புகள் இன்றளவும் கிராமவாசிகளின் வாழ்வோடு ஒன்றிணைந்ததாக உள்ளது. எந்நோய்க்கான மருந்தாயினும் அதை நம்மைச் சுற்றியுள்ள தாவரங்களிலிருந்தும் பிறவகைச் சேர்மானங்களிலிருந்தும் நாமே தயாரித்துக்கொள்கிற ஒரு தைரியவைத்தியம் நமக்கு தொல்காலத்திலிருந்தே பழக்கமான நடைமுறையாகும். சித்தா, ஆயுர்வேத, ஹோமியோபதி ஆகிய மரபுமுறைகள் மருத்துவப்படிப்புகளாக பொதுக்கல்வி அடைந்தபின், தற்காலத்துக்குத் தக்கவாறு பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அம்மருத்துவ முறைகள் எல்லா பகுதிகளுக்கும் கால்நடை மருத்துவர்களாலும் கால்நடைச் செவிலியர்களாலும் கொண்டுசெல்லப்பட்டன.

ஒரு சேவையாக அறியப்படுதலைத் தாண்டி, சிறந்த வணிகமாகவே இன்று மருத்துவத்துறை அறியப்படுகிறது. அந்த வணிகப்பரவல் கால்நடை மருத்துவத்திலும் என்றோ கால்பதித்துவிட்டது. ஒரளவு மேம்பட்ட ஊரில் ஒரு கால்நடை மருத்துவர் தாங்கள் செல்கிற மாட்டுக்காரரிடமிருந்து சராசரியாக ரூ 500 லிருந்து ரூ 2000 வரை, மருத்துவக் கட்டணமாகப் பெறுகிறார்கள். ஐநூறு ரூபாய் மருத்துவக்கட்டணமாகத் தந்த சம்சாரி, அந்த மாட்டிலிருந்து பால்கறந்து மீண்டும் அத்தொகையை ஈட்டுவதற்கு (தோராயமாக நாளொன்றுக்கு 5லிட்டர் பால் அந்த மாடு கறக்கிறது எனக்கொள்வோம்) ஐந்தாறு நாட்கள் ஆகும். கிட்டத்தட்ட அம்மாத வருமானத்தில் கணிசமான பகுதியை அவர் தான்வளர்க்கும் மாடுகளின் வைத்தியத்திற்காக இழக்கிறார். மிகுந்த மன உளைச்சலுடன்தான் அவர் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்கிறார். அவருடைய ஒரே வாழ்வாதாரம் அந்த மாடுதான்.

கால்நடை மருத்துவச்சிகிச்சையில் செலவுகூடுவதற்கான முக்கியக் காரணமாக இருப்பது, 'ஒற்றைப்படையான சிகிச்சைமுறை'யை நாம் கடைபிடிப்பதுதான் என அத்துறையைச் சார்ந்த மருத்துவரான பாக்கியராஜ் குறிப்பிடுகிறார். குணப்படுத்துதலுக்கான சாத்தியமுள்ள பிற பாரம்பரிய மருத்துவ வழிமுறைகளையும், வாய்மொழி வைத்தியங்களையும் நவீன மருத்துவத்துக்குள் ஒன்றுகலந்து தேவையான இடத்தில் தேவையான தீர்வைத் தருவதே ஒரு நேர்மையான மருத்துவனின் முதற்கடமை என்கிறார் அவர். இது மனித மருத்துவத்திற்கும் பொருந்தும். இதன்மூலம் செலவு பெருமளவு குறைவதையும் நம்மால் அனுபவப்பூர்வமாக உணரமுடிகிறது.

எப்படி ஒரு விவசாயி தன்னிடமுள்ள மாட்டுச்சாணம், கோமியம், இலைதழைக் கொண்டு தனது விவசாயத்தை அமைத்துக்கொள்கிறாரோ, அதேபோல் தனக்குத் தெரிந்த வைத்தியத்தால் தன்னிடமோ அல்லது தன்னைச்சுற்றியோ உள்ள மருந்துகளை வைத்து கால்நடை நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நடைமுறை பரவலாக்கப்பட வேண்டும். தன்னால் இயலாதபட்சத்தில், கால்நடை மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்டு அதற்கேற்ற வைத்தியமுறைகளைக் கையாளலாம். எடுத்தவுடனேயே மருத்துவரை அழைத்துவந்து, சாதாரண நோய்க்கு நிறைய செலவழிக்கும் ஒரு அவசரத்தை நாம் கைவிடவேண்டும்.

உதாரணமாக, சில சமயங்களில் மாடு கன்று ஈன்றவுடன் அதனுடைய நஞ்சுக்கொடி வெளியேவராமல் இருக்கும். இதை கிராமத்து வழக்கில் 'உறுப்பு போடல' அல்லது 'இளங்கொடி போடல' என்பார்கள். சினையீன்ற பசுக்களுக்கு நிகழ்கிற ஒரு பிரச்சனை இது. இதற்குச் சிகிச்சையாக, எள்ளை வறுத்து வெல்லம்போட்டு இடித்து அதை மாவாக்கி மாட்டுக்குத் தின்னக்கொடுப்பது வழக்கம். இதுவொரு தொன்மை வைத்தியமுறை. அறிவியல் விளக்கப்படி பார்த்தால், கர்ப்பப் பையை சுருங்கிவிரியச் செய்யும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை எள்ளு அதிகரிக்கச் செய்கிறது. அப்படிச் சுருங்கிவிரியச் செய்யும்போது, மாட்டின் நஞ்சுக்கொடி தானாக வெளியேவந்து விழும். இன்றளவும் மாடுவளர்ப்பவர்கள் கடைபிடிக்கும் பேறுகால வைத்தியம் இது. இம்முறை அல்லோபதி இல்லைதான், ஆனால் அல்லோபதிக்கான அறியவில் பின்விளக்கத்தை இது கொண்டிருக்கிறது.

ஆனாலும், சில கிராமத்து ஆட்களின் மனதில் ஊசிபோடுவதுதான் சிறந்த சிகிச்சை என்பது ஆழப்பதிந்துள்ளது. அல்லோபதி மருத்துவரே சில சமயங்களில் சித்த மருந்துகளை (ஜீரணத்திற்கு திரிபலா சூரணம் போன்ற...) மாடுகளுக்குக் கொடுத்தபோதிலும், 'ஏதாச்சும் ஊசியிருந்தா போட்டுவிடுங்க சார்' எனக் கேட்கிற ஆட்களும் உண்டு. அத்தைகைய எளிய மனிதர்களின் உளவியல் நிறைவுக்காக, சில நேரங்களில் வெறும் குளுக்கோஸை ஊசிகளில் ஏற்றி, பாதிப்பில்லாத இடத்தில் அதை மாட்டுக்குச் செலுத்தி அனுப்பிவைக்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள். அப்பொழுதான் மாட்டுக்காரர்களுக்கு 'அப்பாடா!' என்றிருக்கிறது. மாட்டைவிட அதை அழைத்துவரும் மனிதரை திருப்திப்படுத்த வேண்டிய நெருக்கடியும் மருத்துவர்கள் ஏற்கிறார்கள். இந்த அசாதாரணச்சூழல் ஒன்றைத்தான் சுட்டுகிறது, கால்நடை மருத்துவர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உண்டாகவேண்டும்.

மடிவீக்கத்திற்கு இயற்கை வைத்தியத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, தோல்முள் நீக்காத சோற்றுக்கற்றாழை ஒருமுழம், இரு உள்ளங்கையளவு மஞ்சள்தூள், கொட்டைப்பாக்கு அளவுக்கு சுண்ணாம்பு ஆகியவைகளை எடுத்து நன்கு அரைத்தால் அரக்கு நிறத்தில் கலவை திரண்டுவரும். அதையெடுத்து கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கரைத்து (தரையில் சொட்டும் பதத்தில்) வைத்துக்கொள்ள வேண்டும். மடியை தேங்காய்நாரால் தேய்த்துக்கழுவி, நான்கு காம்பிலும் பால் கறந்தபிறகு மடிமுழுக்க படருமளவுக்கு நன்றாக தேய்த்துவிட வேண்டும். இதுபோல, ஒருவாரம் மடியில் பத்துப்போட வேண்டும். நான்காவது நாளிலிருந்து மடிவீக்கம் வற்றத்தொடங்கும். நூறுசதவீதம் பலனளிக்கும் சித்தவைத்தியம் இது.

ஹோமியோபதி மருத்துவ முறையிலும் கால்நடை நோய்களுக்கான மிகச்சிறந்த வைத்தியங்கள் உள்ளன. பசுக்களில் சில நேரங்களில் பால் இரத்தமாக வடியும். இதுவும் ஒருவகையான கால்நடை வியாதி. 'ஹமாமேலிஸ்' என்றொரு மருந்து ஹோமியோபதியில் உண்டு. குறிப்பிட்ட potential அளவுகளில் ( உதாரணமாக 30 பொட்டன்சியல்), ஒவ்வொரு மூன்றுமணி நேரத்திற்கு ஒருமுறை வீதம் நான்கு நாட்கள் மாட்டுக்குத் தரும்போது, மடிக்காம்பில் இரத்தம் கசிவது முழுமையாக நின்றிவிடும். செலவைப் பொறுத்தவரை இம்மருந்து 60 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும். இந்த ஹோமியோபதி மருந்தையும், ஐஸ்கட்டி ஒத்தடமும் கொடுத்துவந்தால் 95 விழுக்காடு இரத்தக்கசிவு நோய் குணமாகிவிடும்.

மனிதனுக்கோ, விலங்குகளுக்கோ நோய்ச்சிகிச்சையப் பொறுத்தவரையில் பெரும்பான்மையாக இரண்டு முறைகளே பின்னபற்றப்படுகின்றன. வருமுன் காத்தல் மற்றும் வந்தபின் நீக்கம். வருமுன் நோயைக் காப்பது என்பது தடுப்பூசிகளால் நிறைவேற்றப்படுகிறது. இம்முறையில் அல்லோபதி மருத்துவத்தின் பங்களிப்பு அதிகம். கால்நடைகளில் ஏற்படும் புண்களுக்கான மருந்துகள் தற்போது மருந்துத் தெளிப்பான்கள் (Spary) வடிவத்தில் அல்லோபதி மருத்துவத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அழுகும் புண்ணைத் தொட்டுத்தடவி களிம்புபூசத் தயங்குகிற கைகளுக்கு இந்த நவீனம் பிடித்துப்போகிறது. இம்முறை முற்றிலும் தவறென நாம் தவிர்த்துவிட முடியாது. ஒன்றால் இயலாதபொழுது இன்னொன்று அந்த இடத்தை நிரப்புகிறது.

எளிதில் கிடைத்தல், கட்டுபடியான கட்டணம், முழுமையான தீர்வு... இவைகள்தான் ஒரு மருத்துவத்தின் அடிப்படை இலக்குகள். ஒற்றைப்படையாக வெறுமனே அல்லோபதியையோ அல்லது இயற்கை மருத்துவத்தையோ வலுக்கட்டாயமாகப் பின்பற்றுவது ஏதோவொரு புள்ளியில் ஒரு நம்பிக்கையிழப்பையும் பொருளிழப்பையும் உண்டாக்கிவிடுகிறது. அவ்வகையில் பார்த்தால், கால்நடை மருத்துவம் என்பது வெவ்வேறுவகை மருத்துவமுறைகளின் கூட்டுத்தொகுப்பாக அமைகையில் அதன் செலவு பெருமளவில் குறைவதை நம்மால் காணமுடியும். கிராமத்துவாசிகளுக்கு செலவுகுறைந்த வைத்தியத்தில் முழுமையான தீர்வினை வழங்குகிற வைத்தியச்சாலைகள் இன்னும் உருவாகவில்லை என்பது நம்முடைய வளர்ச்சியிலுள்ள வெற்றிடத்தையே காட்டுகிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவமுறைகளால் சிகிச்சையளிக்கிற ஒரு வைத்தியச்சாலை, கிராம மக்களால் எளிதில் அணுகமுடிகிற தொலைவில் அமைகையில்... எத்தனையோ இழப்புகளை அந்த வைத்தியச்சாலை இருதரப்பிலும் குறைத்துவிடும். எப்படி அரவிந்த் கண்மருத்துவமனைக் குழுமம், ஒவ்வொரு கிராமத்திலும் தன்னுடைய முதல்நிலை பரிசோதனைக் கூடத்தை அமைத்து கண்பரிசோதனை செய்து, அவசியப்பட்டால் மட்டும் அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துவருகிறதோ... அதைப்போல ஒரு முதல்நிலைச் சிகிச்சையகம் கால்நடைகளுக்கும் அமைதல் வேண்டும்.

எப்படி அபய் பங் மற்றும் இராணி பங் இருவரும், கிராமப்புற பழமை மருத்துவமுறையையும் நவீன அல்லோபதி மருத்துவமுறையையும் இணைத்து, வட இந்திய மாநிலத்தில் குழந்தைகளின் இறப்புவிகிதத்தை பெருமளவில் கட்டுப்படுத்தினார்களோ, அதேபோல்.... கால்நடைகள், வளர்ப்புயிரிகள், செல்லப்பிராணிகளுக்கான மருத்துவத்திலும் பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஒரு சிகிச்சைமுறையை உருவாக்க வேண்டும். இவ்வகையில் ஒரு முயற்சி நிறைவேற்றப்பட்டால், நம்முடைய பழம்பெரும் மருத்துவமுறைகளை இன்னும் பரவலாக விரிவடையச்செய்து, அறிவியில் ரீதியாகவும் நம்மால் ஆவணப்படுத்தி வெளியுலகிற்கு நிரூபித்துக்காட்ட முடியும்.

இந்த எல்லா எண்ணங்களையும் மனதில் வைத்து, குக்கூ குழந்தைகள் வெளியின் வாயிலாக 'நடமாடும் கால்நடை மருத்துவ மையம்' ஒன்றினை சமகாலச் செயல்பாடாகத் துவங்குகிறோம். இத்திட்டத்தின்படி, கால்நடை மருத்துவச் சிகிச்சைக்கான அடிப்படைகளாக ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருந்துகள் உபகரணங்கள் அடங்கிய வாகனம் ஒன்று இந்த நடமாடும் வைத்தியசாலையாக கிராமங்களில் பயணிக்கும். முதற்கட்டமாக வாரயிறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் இதன் செயற்பயணம் அமையவுள்ளது. தேவையைப் பொறுத்தும் இதற்குக் கிடைக்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தும் இந்தத் திட்டம் மற்ற நாட்களுக்கும் நீட்டிக்கப்படும்.

தங்களுடைய வாழ்வாதாரமாக ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடை வளர்க்கும் கிராமவாசிகளின் வருமான இழப்பைக் குறைப்பதற்கும், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதிக செலவில்லாமல் அவைகளைப் பராமரித்து வளர்ப்பதற்கும் , தேவையற்ற இழப்புகளை சாமானிய மக்களிடத்தில் குறைக்கும் நோக்குடனேயே இந்த சிகிச்சைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் எந்த வைத்தியமுறை தேவையோ அதை வழங்கி, பாரம்பரிய மற்றும் நவீன முறைமைகளால் முழுமையான சிகிச்சையளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். திட்டம் தொடரத்தொடர உண்டாகும் குறைகளை நிவர்த்திசெய்து, தன்னைத்தானே புதுப்பித்து இத்திட்டம் தொய்வின்றித் தொடர்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு தொலைபேசி எண் இதற்கென ஒதுக்கப்பட்டு, முதல்நிலை சிகிச்சைக்கான மருத்துவ ஆலோசனைகளை அதன்வழியாகவே வழங்கும் துணைத்திட்டமும் இதிலுள்ளது.


இந்த நடமாடும் கால்நடை மருத்துவ மையத்திற்கான கட்டணம் என எதையும் நிர்ணயிக்கவில்லை. குக்கூ காட்டுப்பள்ளி வைத்தியசாலையில் வைத்தியத்திற்கு கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஒரு உண்டியல் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். சிகிச்சை பெற்றவர்கள் தங்களால் இயன்ற தொகையை அதில் செலுத்திவிட்டுச் செல்வார்கள். ஒருசிலர் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள் சிலவற்றை உணவுக்காகக் கொடுத்துப்போவார்கள். அதேபோல, இந்த நடமாடும் கால்நடை மையத்திலும், கிராம மக்கள் அவர்களால் இயன்றதை வைத்தியத்திற்கான சிகிச்சைத் தொகையாக வழங்கலாம். அல்லது அவர்களிடம் உள்ள காய்கறிகளையோ, வேளாண் பொருட்களையோ சிறிதளவு ஈடாகக் கொடுக்கலாம். அவர்களின் மனது தீர்மானிப்பதை அவர்கள் தரலாம். சிறிய அளவில் ஒரு பண்டமாற்று முறையாக இதன் பொருளியல் அமைய விழைகிறோம்.


குக்கூ உரையாடல்களின் விளைவால் உருவானது இந்தச் செயல்திட்டம். குக்கூ உரையாடலில் உரையாற்றிய மருத்துவர்கள் (வனவிலங்கு - கால்நடை) இத்திட்டத்திற்கான அமைப்புச்செயல்பாட்டின் பொறுப்பினை ஏற்றுள்ளார்கள். வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உதவிக்கோரிக்கைகள் நண்பர்களுடமும் அறிந்த தோழமைகளிடமும் விடுக்கப்பட்டுள்ளன. வாயில்லா ஜீவன்களின் கண்ணில் ஒளிர்கிற கருணை நமக்கு இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்றிக்கொடுக்கும் என நம்புவோமாக!

இந்த 'நடமாடும் கால்நடை மருத்துவ மையம்' திட்டமானது, வருகிற 31.05.2020 அன்று நிகழ்கிற குக்கூ நேரலை உரையாடலில், சமூகச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான 'பிரகாஷ் ஆம்தே' (பாபா ஆம்தேவின் மகன்) அவர்களின் குரலாலும் ஆசியாலும் துவங்கப்படவுள்ளது. தன்னுடைய சமூகப்பணிகளுக்காக பத்மஸ்ரீ மற்றும் இராமன் மகிசேஷ விருதுபெற்ற சேவைமனிதர் இவர். நடமாடும் கால்நடை வைத்தியச்சாலைக்கான நல்லறிவிப்பு, இந்தியாவின் மிகமுக்கிய சமூக ஆளுமையின் வாழ்த்துக்குரலில் துவங்குவதில் நாங்கள் அனைவரும் நெஞ்சு நெகிழ்ந்து நிற்கிறோம்.

இந்தச் செயல்திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிற கால்நடை மருத்துவர் பாக்கியராஜ் மற்றும் அவரது மருத்துவ நண்பர்கள், ஹோமியோபதி மருத்துவர்கள் பிரேமா கோபால கிருஷ்ணன் வெள்ளைச்சாமி, ஸ்ரீலட்சுமி ஜெயராமன் மற்றும் சித்த மருத்துவர்கள் முத்துச்சாமி, தயாகரன், நர்மதா ஆகியோர்களை இக்கணத்தில் நெஞ்சின் நன்றிகளோடு நினைத்துக்கொள்கிறோம்.


விளையாடுகையிலோ அல்லது வேலைசெய்கையிலோ அடிபட்டால், தாத்தாப்பூண்டு (கிணத்துப்பூண்டு) செடியின் இலையைக் கிள்ளிக்கசக்கி பச்சைச்சாறை புண்ணில் வைத்து மூத்தவர்கள் அழுத்திவிடும் வைத்தியத்தை நாம் கிராமங்களில் இன்றும் காண்கிறோம். சிலர் அனுபவித்திருக்கிறோம். சில நிமிடங்களில் காயத்தில் இரத்தம் உறைந்துவிட்டும். இப்படி மனிதனுக்கும் கால்நடைக்கும் பல்லாயிரம் வைத்தியங்கள் தலைமுறை அறிவாகப் பரவிவருகிறது. டிஜிட்டலில் விடைதேடும் சமூகத்திற்கு, அந்த வடிவிலும் நாம் இந்த அறிவைத் தரவேற்றம் செய்தாக வேண்டும். அந்தப் பெருந்துவக்கத்தை இப்பயணம் நிகழ்த்திவைக்கும்.

கன்னுக்குட்டி மண்ணை நக்கக்கூடாதென அதற்கு வாக்கூடு போட்டுவிடுகிற... நாக்கால் நக்கிக் குடிக்கையில் மாட்டின் பித்தம் தானாய்த்தெளிய கருங்கல் தண்ணித்தொட்டி அமைக்கிற... நுரைதள்ளும் நாயின் வாயில் சோப்பைக் கரைத்து ஊற்றுகிற... இறுக்கும் மூக்கணாங்கயிறைத் தளர்த்திவிடுகிற... அழுகிய பால்காம்பில் வேப்ப ஈர்க்கை சொருகிற... வேப்பெண்ணையைத் தொட்டு உன்னிகடித்த இடத்தில் தடவுகிற... இப்படி கால்நடைகளுக்கான வைத்தியத்தை காலாகாலத்துக்கும் அழியாமல் காத்துவைத்திருக்கிற அத்தனை மூத்தோர்களின் அறிவுக்கருணையைத் தொழுது, இத்திட்டத்தை தொடங்குகிறோம்.

எத்தனையோ செயலுக்கு வெளிச்சமளித்த இறைப்பேரொளி இதனையும் வழிநடத்துவதாக!

Comments

Popular Posts