விவசாய குறிப்புகள்..!










விவசாய குறிப்புகள்..!
எலுமிச்சை மரத்திற்கு மீன் கழிவுகளை போடுவதன் மூலம் செடிகள் நன்றாக செழித்து வளரும். அதேபோல் காயும் திரட்சியாக காணப்படும்.
தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டினைக் கட்டுப்படுத்த 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 1 கிலோ ஆமணக்கு ஆகிய இரண்டையும் தண்ணீரில் நன்கு கரைத்து, மண் சட்டியில் ஊற்றி, தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் வைத்தால், வண்டுகள் அதில் விழுந்து இறந்துவிடும்.
வறட்சிக்காலத்தில் கால்நடைகளுக்கு புளியங்கொட்டையின் தோலை நீக்கி பொடியாக்கி, வேக வைத்து கூழாக அளிக்க வேண்டும். ஒரு பசுவிற்கு அரை கிலோ வீதம் கொடுப்பதன் மூலம் அடர் தீவன அளவை குறைக்கலாம்.
உளுந்து, தட்டைப்பயிறு, நரிப்பயிறு ஆகிய பயிறு வகை பயிர்களை சேமிக்கும் பொழுது சாக்கு அல்லது டிரம்மில் முதலில் கைப்பிடி அளவு உப்பை அடியில் போட்டு அதன் மேல் பயிறுகளை கொட்டி சேமிக்க வேண்டும். இதனால் பொட்டு பூச்சிகள் எதுவும் வராது.
வீட்டுத்தோட்டத்தில் கொய்யா, மா, சப்போட்டா போன்ற மரவகைகள் இருந்தால், முதல் இரண்டு வருடம் பூக்கும் பூக்களை உருவி விடுவதன் மூலம் பின்னால் காய்கள் நன்றாக காய்க்கும்.
வறட்சியில் இருந்து மாடுகளை பாதுகாக்க கொட்டகையின் பக்கவாட்டில் நனைத்த கோணிப் பைகளை கட்டி வைக்க வேண்டும்.
தென்னையில் மகரந்த சேர்க்கையை அதிகரித்து அதிக காய் பிடிக்க ஏதுவாக ஏக்கருக்கு ஐந்து தேனீப் பெட்டிகளை வைக்க வேண்டும். தென்னையுடன் தேன் கிடைப்பது இரட்டிப்பு லாபம் தான்.
வயலில் யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக மாட்டுக்கோமியத்தை உபயோகப்படுத்தலாம். டி.ஏ.பி-க்கு பதிலாக ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
விவசாய நிலத்தில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் சோளம் விதைத்தால், அந்த நிலத்தில் கோரை புல் வளருவதில்லை. அதே போல் சோளம் சாகுபடி செய்த நிலத்தில் மஞ்சள் நடவு செய்தால் மகசூல் அதிகமாக இருக்கும்.
மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழத்தோட்டங்களில் அதிகளவில் அணில்களின் நடமாட்டம் இருக்கும். பழத்தோட்டத்தில் அணில் வராமல் விரட்ட ஒரு கைப்பிடி அளவிலான பூண்டை அரைத்து நான்கு லிட்டர் தண்ணீருடன் கலந்து மரத்தில் தௌpக்க வேண்டும். இவ்வாறு தௌpத்தால் பூண்டு வாசனையால் அணில்கள் ஓடி விடும். மேலும் பழத் தோட்டத்திற்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
பொட்டாசியத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள், அதற்கு பதிலாக அடுப்பு சாம்பலை வயலுக்கு பயன்படுத்தலாம்.
கம்பு சாகுபடி நிலத்தில் வாழை பயிரை நடவு செய்தால் அதிக மகசூல் பெறலாம். மேலும் கம்பு சாகுபடி செய்த வயலில் நிலக்கடலையும், நிலக்கடலை சாகுபடி செய்த நிலத்தில் கம்பை மறு சுழற்சி முறையில் பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக கிடைக்கும்.
காய் பிடிக்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் கொழிஞ்சியை வைத்தால் காய்கள் நன்றாக பிடிக்கும்.
ஐந்து லிட்டர் கோமியம், கடுக்காய், வெண்மை நிற காதி சோப்பு, கல் உப்பு, எலுமிச்சம்பழம் ஆகியவை கலந்த சாற்றை பார்த்தீனிய செடிகளின் வேர் பகுதியிலிருந்து செடி முழுக்க அடித்தால் சில நாட்களில் காய்ந்து வாடிவிடும்.


Comments

Popular Posts