Neengaatha Ninaivugal

Aran Kumar
வாழ்வில் சில விடயங்களை பெரிதாக சாதிக்காவிட்டாலும் நீங்காத நினைவுகளாக தேக்கி விடுகிறது.
எனக்கு விவசாயத்தை தவிர வேறொன்றும் உண்மையில் தெரியாது.
சமீப காலங்களில் மண் வளத்தைப்பற்றி பெரிதாக விவாதங்கள் போகிறது.
அப்போதெல்லாம் மண்வளம் பேண என்ன செய்தோம் என்பதை திரும்பத்திரும்ப அசைபோடுகிறோம்.
போர் அடிப்பதாக தோன்றுபவர்கள் கடந்து போங்கள். ஏனென்றால் இது திரும்பத்திரும்ப வரும் கதை.

பள்ளிப்பருவத்தில் கோடைகாலம் தொடங்கியதுமே ஏரியிலிருந்து வண்டல் அடிக்க தயாராவோம். நாங்கள்ளாம் ஒப்புக்கு சப்பாணிகள்தான்.
வீட்டுப்பெரியவர்கள் அந்த வேலையில் மும்முரமாய் இறங்குவார்கள்.
தை மாதத்தில் அறுவடை முடிந்த வயல்கள் தரிசாக கிடக்கும்.
முதலில் வாகான இடங்களில் வரப்பு வெட்டுவார்கள் .உயர வப்புகளில் கற்களை போட்டு மண்தள்ளி தென்னை ஓலைகளை போட்டு மறுபடி மண் தள்ளுவார்கள்.
வரகம்புல்லை எரித்து சாம்பலை விளக்ணெயில் குழைத்து வண்டிக்கு மை தயாரிப்பார்கள்.
பாரை பிடித்துத்தூக்கி வாகாக சக்கரத்தை கழற்றி மையிட கூட இரண்டு ஆட்களாவது வேண்டும்.
அடுத்து வண்டிக்கு கட்டுவிடவேண்டும்.
சக்கரத்தை பிணைத்திருக்கும் இரும்பு வட்டை தளர்ச்சியாக இருந்தால் ஆசாரி அதை சூடாக்கி துண்டடித்து மறுபடி பிணைத்து சரியாக்குவார்.
பிறகென்ன? வண்டல் ஓட்டும் படலம்தான்.
முன்பாகவே நல்ல வண்டல் உள்ள இடத்தை பார்த்துவைத்துக்கொள்வார்கள்.
மாலைநான்கு மணிக்குள் வண்டிக்காளைகளுக்கு ராசமரியாதை.அதற்குள் வயிற்றை நிரப்பிடணும்.
அப்போதிருந்து நள்ளிரவு வரை வண்டல் அள்ளுவோம்.
அப்போது இந்த அரசாங்க அனுமதி சமாச்சாரமெல்லாம் கிடையாது.
கோடையின் முதல்மழை வரை இது தொடரும்.
ஒருநாளைக்கு வில்வண்டி என்றால் முன்பின்னாக 30 ம்.
காளையை அவிழ்த்து நாட்டிவிடும் சாதாரண வண்டியென்றால் 20 -22 ம் ஓட்டுவார்கள்.
வயலில்மண்இறைப்பதும் இரவில்தான்.
நானும் என் அத்தை மகன்களும் ஆறாம் வகுப்பில் மண் இறைத்தது இன்னும் நினைவிருக்கிறது.
ஒரு வண்டி மண் இறைக்க 40 பைசா என என் தந்தையிடம் கூலி பேசிக்கொண்டு இறைத்தோம்.
அந்த காசை வாங்கிக்கொண்டு சகலகலாவல்லவன் படத்திற்கு சென்றோம்.
டிக்கெட் பால்கனிக்கு இரண்டரை ரூபாய்.
அதன்பிறகு ஒரு பகுதி மண் இறைக்க வண்டிக்கு ஒண்ணேகால் ரூபாய் க்கு என் தந்தை பேசிவிட்டார்.ஒருமுறை மண் இறைத்தால் ஸ்பன் துணியில் சீருடை வாங்கித்தருவதாக சொன்னார்கள்.ஆனால் வாங்கித்தரவேயில்லை.
இதெல்லாம் வாழ்வில் அசைபோட மகிழ்வாகவே இருக்கிறது.அள்ளித்தந்தது எதுவுமில்லை.
இந்த காலங்களிலிருந்தே மண்ணை கவனிக்க பழக்கப்படுத்தப்பட்டேன்.
நீர்பாய்ச்சும்போது மடை மாறும்போது மண் கூழ்போல் கரையக்கூடாது.
அப்படிக்கரைந்தால் அந்த வருடம் அந்தவயலுக்கு வண்டல் ஓட்டியாக வேண்டும். உழவோட்டும்போது கட்டிகள் கிளம்பக்கூடாது.கிளம்பினால் அதில் கிடைபோடாமல் பயிர்வைக்க மாட்டார்கள்.
வயலடித்ததும் மலையிலிருந்து தழைகளை வாங்கிப்போடுவோம். கலப்பையில் மாட்டாமல் இருக்க தழைகளை துண்டுதுண்டாக நறுக்கவேண்டும்.பலமுறை விரல்களை வெட்டிக்கொண்டதுண்டு.
இன்றும் நாற்றங்காலுக்கு இதை கடைபிடிக்கிறேன்.
இந்த இலைதழைகள் ஊறிய வயல் சேறு விரலில் வழித்தால் வெண்ணெய் போல் வரவேண்டும் என விரும்புவார்கள்.
அப்போதுதான் பயிர் விரைவில் வேர்பிடித்து கட்டைகட்டும்.
இப்போதெல்லாம் மண்வளம் காக்க ஏதேதோ உத்திகளைச்சொல்கிறார்கள்.
நாம் பழமையிலே இருப்பதாலோ என்னவோ இன்னும் விவசாயத்துல பெரிதாக சம்பாதிக்க முடியலை.
நெல் நட்டு களை பிடுங்கி அறுவடை மட்டும்தான்.
விளைச்சல்குறைவுதான் 20 மூட்டைகள் அதிகபட்சம் வரலாம்.
எங்கிருந்தோ மருந்தடிக்க ஒரு ஆளைக்கூட்டிவருவார்கள்.
அதைவேடிக்கை பார்க்க பள்ளிக்கு மட்டம் போட்ட ஆட்களெல்லாம் உண்டு.
மரவள்ளி வந்த பிறகு ரசாயன உரங்கள் வந்தது.
அதுவும் பொட்டாஷ்.
புண்ணில் பட்டால் சரியாகிடும்னு சொன்னார்கள்.
யாராவது பொட்டாஷ் வாங்கி வந்தால் இரண்டுபேராவது அதை புண்மீது தூவுவார்கள்.
அதெல்லாம் ஒரு கனாக்காலம்னு சொல்லிட்டுப்போய்ட்டே இருக்கலாம்.

Comments

Popular Posts