Minminidesam Blog
தில்லுதுரயின்
மருமகன் ஒரு மகா குடிகாரன்.
டாஸ்மாக்கே கோயில்
என வாழும் தமிழ்க் குடிமகன்களில் ஒருவன்.
எத்தனையோ முறை
மகளும் மனைவியும் புகார் கூறியும் தில்லுதுர அதுகுறித்து தனது மருமகனிடம் பேசியதில்லை.
குடிப்பதினால்
ஏற்படும் சங்கடங்களை உணரும்போது அவர் அதை நிறுத்திவிடுவார் என்பது தில்லுதுரயின் எண்ணம்.
ஆனால், தில்லுதுரயின்
மனைவியோ இதை விடுவதாயில்லை.
மருமகனை எப்போதும்
திட்டுவதும் கேவலமாய்ப் பேசுவதும் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
தில்லுதுர மனைவியிடம்
எவ்வளவோ சொல்லியும் அவர் எப்போதும் போல், தில்லுதுரயின் பேச்சை மதித்ததேயில்லை.
அன்றும் அப்படித்தான்.
தீபாவளிக்கோ எதற்கோ
மகளுடன் வீட்டுக்கு வந்த மருமகன், மாலை வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வந்திருக்கிறான்
என்று ஆரம்பித்த வக்குவாதம்… சண்டையாய் மாறி, கைகலப்பாகி கடைசியில் தில்லுதுரயின் மருமகன்
தில்லுதுரயின் மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்றதில் போய் முடிந்துவிட்டது.
நல்லவேளையாய்,
மருமகன் துப்பாக்கி குறி தவறியதால் மாமியார் உயிர் தப்பிவிட, அவர் மருமகன் மீது போலிசில்
புகார் செய்தேயாக வேண்டும் என அலுவலகத்தில் தில்லுதுரயை உடனே வரச் சொன்னார்.
தில்லுதுர வீடு
வந்து சேர்வதற்குள் நிலவரம் ஓரளவு தணிந்திருக்க, மனைவியை சமாதானப் படுத்திவிட்டு, மருமகனைக்
கூப்பிட்டு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.
“இதோ பாருங்க…
குடிக்கறது ஒரு மோசமான பழக்கம். அதனால, நீங்க என்னென்ன இழந்திருக்கீங்கனு யோசிச்சுப்
பாருங்க. உங்க மனைவியின் அன்பு, குழந்தைகளுடனான விளையாட்டு, உறவுகளுடனான கொண்டாட்டம்,
உங்க மரியாதை இப்படி எல்லாத்தையும் இழந்திருக்கீங்க..”
மருமகன் தில்லுதுர
சொல்வதின் அர்த்தம் ஓரளவு புரிந்து கவலையுடன் பார்க்க… தில்லுதுர தொடர்ந்தார்.
“இதையெல்லாம் தாண்டி
இன்னிக்கு பொறுப்பான உங்க கையில் துப்பாக்கி தூக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது.
ஆனா, நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்தக் குடியாலதான் இன்னிக்கு உங்க குறியும் தவறிப்
போச்சு.! இதை உணர்ந்துகிட்டீங்கனா சரி.!”.
.
Comments
Post a Comment